21 Sept 2017

கிழக்கு மாகாணத்தின் 144 பாடசாலைகளில் நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கும் திட்டத்திற்கு கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் வரவேற்பு

SHARE
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு நவீன சுகாதார வசதிகளைக் கொண்ட கழிப்பறைகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான வேலைத் திட்டம் சமகாலத் தேவை கருதி மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி நிலைமையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக உசாத்தணை வேலைத் திட்டங்களை தாம் வரவேற்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா வியாழக்கிழமை 21.09.2017 வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது@ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதும் கல்வி மறுசீரமைப்பில் முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

கல்வியில் கிழக்கு மாகாணம் பின்தங்கியமைக்கு பல்வேறு நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

அந்த வகையில் வசதியீனங்கள் வரிசையில் குடிநீர், கழிப்பறை ஏற்பாடுகளும் உள்ளடங்கும். குறிப்பாக மாணவிகளின் அசௌகரியங்களைப் போக்குவதற்கு நவீன மலசல கூட ஏற்பாடுகள் பெருந்துணை புரியும்.

இதனால், உடற்சோர்வு, மனச்சோர்வு, அசௌகரியம் என்பனவற்றைப் போக்கிக் கொள்ள வழியேற்படும்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவதற்கென மத்திய கல்வியமைச்சினால்  23 கோடி 80 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கழிப்பறை வசதிக் குறைபாடுள்ள, தெரிவு செய்யப்பட்ட 144 பாடசாலைகளில் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நவீன கழிப்பறை வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டு விடும் எனும் விடயம் மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை வசதிக் குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகள் தீர்க்கப்படுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர், கல்வியமைச்சர், மாகாணக் கல்வியமைச்சர், மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அயராத முயற்சி மேற்கொண்டிருந்ததை அறிய முடிகிறது.

பாடசாலைகளில் கழிப்பறைகள் இன்மையால், அல்லது பாவனைக்கு உகந்த சுகாதார வசதிகளோடு மலசலகூடங்கள் இல்லாததால் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்தி இடை விலகுகின்ற நிலைமையும் கடந்த காலங்களில் இருந்து வந்தது.

இவற்றை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மாணவர்ளும் ஆசிரியர்களும் பெரிதும் நன்மையடைவர்.

SHARE

Author: verified_user

0 Comments: