16 Aug 2017

விளைவிக்கப்படும் நெல்லை விற்பதற்கு ஏற்பாடு செய்து தந்து விவசாயிகளின் வாழ்வில் விடிவு காண உதவ வேண்டும். உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை விற்பதற்கு சீரான ஏற்பாடுகளைச்  செய்து தந்து விவசாயிகளின் வாழ்வில் விடிவு காண அதிகாரிகள் உதவ வேண்டும் என உன்னிச்சைகுளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை 15.08.2018 ஊடகங்களுக்கு ஊடாக வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் தெரிவிக்கும்போது@

இம்முறை சிறுபோகச் செய்கையிலீடுபட்ட விவசாயிகள்  எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்து நீர்ப்பாசனம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதினால் நெற் செய்கை வெற்றியளித்ததையிட்டு மாவட்டத்திலுள்ள விவசாய, கமநல, நீர்ப்பாசன மற்றும் நிருவாக அதிகாரிகளுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்ட எந்தவொரு தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகள் தவறி விட்டதனால் விவசாயிகள்  ஏமாற்றத்தில் உழல வேண்டியிருந்தது.

ஆனால், தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக கடந்த 80 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைப்புச் செய்யப்படாது தூர்ந்து போய்க் கிடந்த சிறிய பெரிய குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

இரச்சகல் புலுட்டுமானோடை உள்ளிட்ட குளங்கள் முழுமையாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு அதனால் விவசாயிகள் நன்மையடையத் துவங்கியுள்ளார்கள்.
மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட அரசாங்க அதிபரின் முன்மொழிவின் பயனாக அரசாங்க அதிபரால் வரையப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட திட்டங்களில் 1134 கிலோமீற்றர் உள்ளக விவசாய வீதிகள் உட்பட கிரான் பாலத்தைப் புனரமைப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

12500 மில்லியனுக்கும் அதிகமான தொகையில் கித்துள் உறுகாமம் பெரு நீர்ப்பாசனக் குளங்களை இணைக்கும் வேலைத் திட்டம் முழுமூச்சாக இடம்பெறுகிறது.

முந்தானையாற்று படுகையில் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற வறட்சியைத் தடுப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் இத்திட்டம் இடம்பெறுகின்றது.

இந்த விவசாய மைய அபிவிருத்தித் திட்டங்களால் மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் வெள்ளம் மற்றும்; வறட்சிப்  பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும்.
இது மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
இவை ஒருபுறமிருக்க இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு மாவட்டத் திட்டமிடல் பிரிவு இன்னமும் நிரந்தரமான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட நெல்லை நெற் சந்தைப்படுத்தும் சபையினூடாகக் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகள் திருப்திப்படும் வகையில் அதிகாரிகள்  ஏற்பாடு செய்து தரவில்லை.

விளையும் பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடனர்.

அதனால், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே நெல்லை விற்க வேண்டியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 நெற் களஞ்சியங்களிலும் பிரதேச விவசாயிகள் தமது விளை நெல்லை விற்க ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும்.
இம்முறை தனியார் வர்த்தகர் ஒருவர் விவசாயிகளிடமிருந்து அதி உச்ச விலைக்கு விளை நெல்லைக் கொள்வனவு செய்ததால் விவசாயிகள் காப்பாற்றப்பட்டார்கள்.

இது ஒரு புறமிருக்க பிரதேச விவசாயத்தைப் பாதிக்கும் மணல் அகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

மேய்ச்சல் தரை விவகாரம் சர்ச்சைக்குரியதாக தீர்வு காணப்படாத தொடர் பிரச்சினையாகவும் இருந்து வருகின்றது.

காட்டு யானைகளின் தொல்லை தொடர்வது போன்ற பல்வேறு பிரச்சினைகளை பிரதேச விவசாயிகள் இன்னமும் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
ஏழை விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகளையும் அரச உயர் மட்ட அதிகாரிகள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: