2 Aug 2017

கிழக்கு மாகாணத்தின் பௌதீக அபிவிருத்தி கடந்த இரண்டரை வருடங்களில் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம்

SHARE
கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையின் பௌதீக அபிவிருத்தி என்பது எல்லாவகையிலும் மிகச் சிறந்த  வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாகக் கேட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை 02.08.2017 மேலும் தெரிவித்த அவர்@ கடந்த ஐந்து வருட காலங்களில் கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்ட நிதியை விட அதிகமான நிதியைக் கொண்டு இந்த மாகாண சபையின் இரண்டரை வருட கால நிருவாகத்தில் கல்வி அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது என்பதை வெளிப்படையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எந்த விதமான அபிவிருத்தியும் இடம்பெறவில்லை என்ற மாயையான கருத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல.

செய்யப்படுகின்ற பாரிய அபிவிருத்திகள் வெளிப்படையாகப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மையாகும்.
சிறிய விசயங்கள் பெரிய விழாக்கள் மூலம் பிரபல்யப்படுத்தப்படுகின்றதனால் பிரபல்யப்படுத்தப்படாத பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவில்லை என்று அர்த்தமாகி விடாது.

பெரியளவான நிதி ஒதுக்கீட்டின் மூலம் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சத்தமில்லாமல் அமுல்படுத்தப்படுகின்றன.

வழமையாக கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக நாம் வரைகின்ற 1100 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களை மாற்றியமைத்து 5500 மில்லியன் ரூபாவுக்கான செயற்திட்டங்களை வகுக்குமாறு நிருவாக முறைமையை ஏற்படுத்தித் தந்த பெருமை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டைச் சாரும்.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான 5500 மில்லியன் ரூபாவுக்கான கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தித் திட்டங்களில் கிட்டத்தட்ட 3800 மில்லியன் ரூபாவுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் எஞ்சிய 1700 மில்லியன் ரூபாவுக்கான கல்வி அபிவிருத்திச் செயற்திட்டங்களை இந்த ஆண்டின் இறுதிக்கிடையில் செய்து முடிக்கவுள்ளோம்.
இது ஒரு வரலாற்றுச் சாதனையும் கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்கான பாரிய முன்னெடுப்புடன் கூடிய அடித்தளமுமாகும்.
இதன் பிரதிபலனாக கிழக்கின் கல்வி அபிவிருத்தி அடைவு மட்டம் என்பது மெச்சத்தக்க அளவில் வெகுவிரையில் நிதர்சனமாகிவிடும்.

இந்த யதார்த்தத்துக்கப்பால் மாகாண நிருவாகத்தைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் தவறான அபிப்பிராயங்கள் பரப்பப்படுவது அர்த்தமற்றது.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: