நீதிமன்றம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கவுன்ஸில் ஆகியவற்றின் உத்தரவுகளை உதாசீனம் செய்து கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக பேரவைக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கோரி பல்கலைக்கழக சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை 22.08.2017 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களில் ஒரு சாரார் அங்கு நிருவாக மற்றும் பேரவைக் கட்டிடத்தை ஆக்கிரமித்து கடந்த 8 ஆம் திகதியிலிருந்து போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இதேவேளை, இப்பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் நுழைவாயிலின் முன்னாலும் பல்கலைக்கழக பேரவை மற்றும் நிருவாகக் கட்டிடத்தை ஆக்கிரமித்தும் மாணவர் விடுதி வசதி, வகுப்புத் தடை மாணவர்களின் மீதான தண்டனையை விலக்கிக் கொள்ளல் உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் பல்கலைக் கழக கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் மாணவர்களின் நடவடிக்கைகள் தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் மாணவர்களை அப்புறப்படுத்துமாறும் கோரி வருகின்றனர்.
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், கல்விசாரா ஊழியர் சங்கம் மற்றும் நிருவாக அலுவலர்கள் சங்கம் என்பன இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிருவாகக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த 11ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து அங்கு தங்கியிருந்து வருகின்றனர்@
இதற்கெதிராக பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது மந்தகதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்@
மாணவர்களின் ஆக்கிரமிப்பினால் நிருவாக அலுவல்களை மேற்கொள்வதில் சொல்லவொண்ணா இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன, நிருவாக மற்றும் ஊழியர்களின் சுயாதீன நடமாட்டத்திற்கு அச்சுறுத்தல், கடமைக்கு இடையூறு, மற்றும் தாக்குதல்கள் என்பன போன்ற காரணங்களை வெளிப்படுத்தியும் நிருவாகக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தாம் முன்னெடுத்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழகம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் தனது சகல கல்வி நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதோடு அப்பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்து பீட மாணவர்களை வெளியேறவும் உத்தரவிட்டிருந்தது.
0 Comments:
Post a Comment