(கிருஷ்ணி)
சமாதானத்தினை மையப்படுத்தியே ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையின் ஆயுத மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் நாட்டில் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இதனை காரணம் காட்டியே சர்வதேச அழுத்தங்களும் அதிகரிக்க காரணமாகின்றன.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த 2009 முதல், போரின் போதும் அதற்கு முன்னரும் நடந்த போர்க்குற்ற மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான தகவல்களை சர்வதேச செயல்பாட்டாளர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற முடியாத இப்போதைய இன்னல்களுடன் ஒப்பிடுகையில், மனித உரிமை மீறல் பற்றிய பிரசாரங்கள் பொருத்தமற்றவை என்ற எண்ணம் கூட ஏற்பட்டு விடுகிறது.
இலங்கையில் நடந்த கணக்கற்ற மனித உரிமை மீறல் செயல்கள் பற்றிய பதிவுகள் கிடைக்கின்றன. இலங்கையில் ஒரு காலத்தில் மனித உரிமைகள் இயக்கம் மிகுந்த உயிர்ப்புடன் இருந்தது. இப்போது சர்வதேசச் செயல்பாட்டாளர்களின் குறுக்கீடுகள் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று ஐயுற நேர்கிறது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையில் அதிகாரத்திற்காக பல்வேறு உடனபடிக்கைகள், இணக்கப்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன ஆனால் அவைகள் எதுவும் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ பொதுவாக தமிழ், முஸ்லிம் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ ஏதுவாக அமையவில்லை.
இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றிருப்பினும் யுத்தகாலத்தில் சர்வதேச மனித உரிமை மீறல்களும் மனிதாபிமான சட்டமும் இரு தரப்பினராலும் மீறப்பட்;தனால் உயிர் உடமை மற்றும் சொத்து இழப்புக்கள் மிக மோசமாக ஏற்பட காரணமாக அமைந்தது. போர் நடத்தப்பட்ட முறைமை மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் போரின் இறுதிக் கட்டத்திலும் போர் முடிவடைந்த பின்னரும் வெளிவந்துகொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஜெனிவா மாநாட்டில் ஆணையாளர் முன்மொழிந்த சிபார்சுகள், சர்வதேச பொது மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பன இலங்கை மீது ஓர் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தத்தினை கொடுத்தன.
இவ்வழுத்தங்கள் பாரிய விளைவுகளை உருவாக்கிவிடும் என்பதுடனும் மறு பக்கத்தில் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபடுவதும் முடியாத நிலையில், அரசாங்கம் இவ்வாறாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டில் ஓர் நம்பத்தகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற உறுதி மொழியை வழங்கியதன் அடிப்படையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது மனித உரிமை மீறல்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், பெண்களின் பாலியல் வல்லுறவு பற்றிய விடயங்கள், காணிப்பிரச்சினை போன்ற விடயங்களை ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்குடன் தென்னாபிரிக்காவின் அனுபவத்தினை முன்மாதிரியாக கொண்டு 2010 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது.
தென்னாபிரிக்காவில் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்ட காலத்தில் முற்று முழுதாக அடக்குமுறைகளும் அநீதிகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் இலங்கைதீவில் அடக்குமுறையும் இனங்களுக் கெதிரான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இத்தகைய ஆணைக்குழுவின் முக்கியத்துவமும் அறிக்கையும் நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பாரிய பங்களிப்பு செய்யவில்லை.
யுத்த மீறல்கள் பொறுப்பெற்பதன் மூலமும் நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலமும் நட்டினை சமாதானத்தினை நோக்கி நகர்த்த முடியும். இதற்கான ஓர் வாய்ப்பினை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை.
தற்போதைய சமாதான முன்னெடுப்புகளில் முக்கிய பிரச்சினையாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்ற பிரச்சினையே முதன்மை பெறுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழு மீள் குடியேற்றம் பற்றி சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்திருப்பினும் அவை தற்போதைய அரசாங்கத்தினால் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமது செந்த இடங்களுக்கு சென்று தமது வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவர்களது வாழ்கை நகருகின்றது. இருப்பினும் இராணுவ நலனுக்காக காணி சுவீகரிப்பு வடகிழக்கில் தொடர்வதனால் சமாதான முன்னெடுப்பில் இப்பிரச்சினை பாரிய தாக்கத்தினை கொடுக்கின்றது எனலாம்.
யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கில் நிலவும் பாரதூரமான பிரச்சினைகளில் ஒன்றான யுத்தத்தால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அழுத்தங்களுக்கு உள்ளானவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதாகும். யுத்தம் காரணமாக காணமால் போனவர்களை பற்றிய தகவல்களை வெளியிடாத பிரச்சினை, யுத்தம் இடம்பெற்ற காலம் முழுவதிலும் பட்ட துன்பங்கள் காரணமாக உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாமை தற்போதைய சமாதான முன்னெடுப்புக்களில் முக்கிய பிரச்சினையாகும்.
இவ்வாறு உளரீதியாக பாதிக்கப்பட்ட ஆண்டான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கருத்து தெரிவிக்கையில். “30 ஆண்டுகளாக போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் இப்போதுதான் நிம்மதியாக வாழத்துவங்கியுள்ளோம். எங்கள் தமிழர்கள் சுதந்திரமாக பயமற்று வாழ அரசியல் தீர்வுக்கு அரசாங்கம் உதவவேண்டும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் மனோநிலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமானதாக காணப்படுகின்றது. யுத்த இழப்புகளுக்கு பிறகும் தமிழ் ஈழம் கோரிக்கையை கையை நாங்கள் கைவிட்டுவிட்டோம். இன்றைய நிலையில் தமிழ் ஈழம் சாத்தியமில்லாதது. இப்போது அதில் திருப்தியடைந்து அதில் நிம்மதியாக வாழ்கிறார்கள். இப்போது பலர்; அதையேதான் விரும்புகிறோம். சிங்கள அரசியல் தலைவர்கள் அரசியலுக்காக பல தவறுகளை செய்யலாம். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள். யாழ்ப்பாணத்தில் இறுதிப்போர் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. யுத்தத்தில் பிழைத்து இப்போதும் உயிரோடு இருக்கும் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு பிழையான கருத்து. வடக்கு-கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் இங்கு இருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளை வளர்த்தெடுக்க மறுவாழ்வுத்திட்டம், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளும், வீடுகள் நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதே நிலத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல், தொழிலை இழந்தவர்களுக்கு அதற்கான இழப்பீடுகள் ஆகியவைகள் தான் எங்களின் அவசர தேவைகள் ஆகும்” (மேற்படி உளரீதியாக பாதிக்கப்பட்ட இப்பெண்ணின் கருத்து மெமரிமெப் க்கு வழங்கப்பட்டதாகும்)
“காணாமற் போனோர் என்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள அதேவேளையில், இவர்கள் பொருளாதார ரீதியிலும் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனர். சிங்கள பேரினவாத இராணுவம் தற்போதும் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள், விடுதிகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றது. அத்துடன் போரின் போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. தமது வாழ்வாதாரத் தொழில்களை சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது மேற்கொள்வதால் தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெருமளவான தமிழ் மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்” என முல்லைத்தீவைச் சேர்ந்து சரஸ்வதி (54) தெரிவித்தார்;.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தற்போது வேறு பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். போரின் போது கணவன்மார்களை இழந்த பெண்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெறமுடியாத நிலையில் வாழ்வதாகவும் இவர்கள் தொழிலிடங்களில் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாவதாகவும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் எவ்வித அரசியல் சுயாட்சி மற்றும் பொருளாதார உதவிகள் மற்றும் நீதி போன்றன மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் இன்னமும் பத்து ஆண்டுகளில் மீண்டுமொரு யுத்தம் தொடங்கும் என அரசியல் ஆர்வலர்கள் எதிர்வு கூறுகிறார்கள்” என்றார்.
0 Comments:
Post a Comment