31 Aug 2017

வாகரைப் பிரதேச செயலகத்துக்கு பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் இருவரில் எவரையாவது நிரந்தரமாக நியமிக்குமாறு வேண்டுகோள்

SHARE

(ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகங்கள் சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் கடந்த 5 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி உதவிப் பிரதேச செயலாளரைக் கொண்டு இயங்கி வருகின்றது.
இதேவேளை, ஏறாவூர் நகர பிரதேச செயலகம் கடந்த சுமார் 4 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி பதில் பிரதேச செயலாளரின் கீழ் இயங்கி வருகின்றது.
மேலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், வாகரை பிரதேச செயலகம், ஆகியவையும் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக  பிரதேச செயலாளர்களின்றி உதவிப் பிரதேச செயலாளர்களின் கீழ் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மேற்படி  பிரதேச செயலகங்களுக்கு பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பொது நல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதேவேளை பிரதேச  செயலாளர் இல்லாத மற்ற மூன்று பிரதேச செயலகங்களிலும் உதவிப் பிரதேச செயலாளர்கள் நிரந்தரமாக கடமை புரிந்து வருகின்ற போதிலும் வாகரைப் பிரதேச செயலகத்தில் வாரத்தில் 3 தினங்கள் மாத்திரமே உதவிப் பிரதேச செயலாளர் கடமையாற்றுகின்றார்.

இப்பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளரும் வாரத்தில் இரு தினங்கள் குறித்த மணித்தியாலங்கள் கடமையிலிருப்பதால் தமக்கு குறைந்தபட்சம் உதவிப் பிரதேச செயலாளரையாவது நிரந்தரமாக நியமிக்குமாறு வாகரைப் பிரதேச மக்கள் சார்பாக தாம் வேண்டுகோள் விடுப்பதாக கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: