20வது அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மாகாண சபைகளின் அங்கீகாரத்ததுக்காக அனுப்படுகிறது. அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (29.08.2017) கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்துக்காக வருகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலய புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கு 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை 28.08.2017 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், இவ்வாறான அரசியல் சட்டத் திருத்தங்கள் வருவது ஒரு சில அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு சில அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை.
அவர்களுக்கு இதுவொரு பெரிய தலையிடியாக உள்ளது. அது மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்குப் செல்கின்ற வேளையில், தற்போதிருக்கும் கிழக்கு மாகாண சபை ஆட்சி நாடாளுமன்ற அங்கிகாரத்துடன் தொடர்ந்தும் இருக்கும்.
உயர் நீதிமன்றத்திலும் இதற்கான அங்கிகாரம் கிடைத்து விடும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்பு பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
முந்தைய பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கான அரசியல் அதிகாரங்களை பறித்தெடுப்பதில் ஆர்வமாக இருந்தன.
ஆனால்,அதற்கு மாற்றமாக தற்போதைய நல்லாட்சி அரசு சிறுபான்மையினருக்கும் அரசியல் அதிகாரங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உளளது.
நல்லாட்சிலே பொருட்களுக்கு விலை அதிகரிப்பு ஏற்பட்டதால் நல்லாட்சி பொல்லாட்சியா என்று எல்லோரும் கேட்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலைமைக்கு நல்லாட்சி அரசைத் தள்ளிகடனாளி நாடாகவும் அடிமை நாடாகவும் ஆக்கியவர்கள் கடந்த ஆட்சியாளர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.
இந்த விலை அதிகரிப்புச் சுமை நீண்ட காலம் இருக்காது. நல்லாட்சி கடன் சுமையிலிருந்து மீண்டதும், பொருட்களின் விலை இயல்பாகக் குறைந்து விடும்.
நல்லாட்சியிலே எத்தனையோ நல்ல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இலஞ்சம் ஊழலுக்குப் பழக்கப்பட்டுப் போய் மக்களைச் சுரண்டி வாழ்ந்த அதிகாரிகள் பண முதலைகள் ஆகியோருக்கு நல்லாட்சி வெறுப்பைத் தான் கொண்டுவரும்.
மற்றெல்லா மாற்றங்களையும் அபிவிருதடதிகளையும் விட அரசியல் மறு சீரமைப்பு என்பது சிறுபான்மைச் சமூகத்திற்கு முக்கியமானது. இதனை அடைந்து கொள்வதில் சிறுபான்மையினராகிய நாம் மகிவும் சாணக்கியத்துடன் காய் நகர்த்த வேண்டும்.
தோற்றுப் போகாதவர்களாக சிறுபான்மை மக்களை நாம் கவனமாகப் பாதுகாத்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய களப் பணி சிறுபான்மை சமூகத் தலைவர்களுக்கு உள்ளது.
இந்த விடயத்தில் இன ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு சமரச ஒத்துழைப்பு என்பன முக்கியம்.
இந்நிகழ்வில் அல்- இக்பால் ஆரம்பப் பாடசாலையை இடை நிலை; பாடசாலையாக தரமுயர்த்துமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் உறுதியளித்தார். பாடசாலைக்கு போட்டோக் கொப்பி இயந்திரமும் முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment