இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசிலிருந்து ஒரு சதமேனும் கிழக்கு மாகாண சபைக்கு வந்து சேரவில்லை. கிழக்கு மாகாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் மத்திய அரசு கையாளும் பாரபட்சப் போக்கினால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்களை எதிர்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கூடான இவ்வாண்டுக்கான அபிவிருத்திக்காக மத்திய அரசினால் ஒதுக்கப்படவேண்டிய நிதி விடுவிக்கப்படாததால் அம்மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் பொதுவான பின்னடைவுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை 16.07.2017 கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைச் சொன்னார்.
தொடர்ந்து கூறிய அவர்@ வருடத்தின் அரையாண்டும் கடந்து விட்ட போதிலும் கிழக்கு மாகாண சபைக்கு இவ்வாண்டுக்கான நிதியில் ஒரு சதமேனும் வந்து சேரவில்லை.
மத்திய அரசினால் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய நிதி தாமதித்துக் கிடைப்பதால் பொதுமக்களே பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள்.
எனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை உரிய நேரத்தில் வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
இதேவேளை கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளின் பற்றுச் சீட்டுக்களுக்கான நிதி சமீபத்தில்தான் மத்திய அரசினால் விடுவிக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்குரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை விரைவில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

0 Comments:
Post a Comment