கிழக்கு மாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி மிக்க காத்தான்குடியில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு அங்கு அமைந்துள்ள ஆதார வைத்தியசாலையிலுள்ள ஆளணியை கணிசமான அளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை நிருவாக காலகட்டத்தில் அம்மாகாணத்தில் அடையப் பெற்றுள்ள சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை 16.07.2017 கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.
இது பற்றி மேலும் கூறிய அவர்@
கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நகரான காத்தான்குடியிலேயே சனத்தொகை அடர்த்தியாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆகையினால் இங்குள்ள காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
அதன்காரணமாக தற்போது இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட சகல தரங்களையும் கொண்டு 130 பேர் என்ற எண்ணிக்கையிலுள்ள ஆளணியை 280ஆக உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில் இந்த ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும் என நம்புகின்றோம்.
மத்திய அரசு இந்த விடயத்தில் கவனத்தை ஈர்த்து மக்களின் சுகாதார நலன் காக்க முன்வரவேண்டும் என்று விரும்புகின்றோம்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளை விட விஷேட கவனமெடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்களையும் நாங்கள் அபிவிருத்தி செய்து வருகின்றோம். அந்த வகையில் புதிய பல பிரிவுகளையும் நாம் ஆரம்பித்து வருகின்றோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையிலான மாகாண சபை ஆட்சி அமையப்பெற்ற மிகக் குறுகிய காலத்திற்குள் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.
முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அபி;விருத்திக்கென மத்திய அரசினூடாக 85 மில்லியன் ரூபா நிதி எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

0 Comments:
Post a Comment