மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை (11.04.2017) இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை மற்றும் தாந்தாமலை ஆகிய பிரதான வீதிகளில் இடம்பெற்ற இவ்விபத்துக்களில் இரு பஸ்கள், இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் என்பன சிக்கிக் கொண்டுள்ளன.
கொக்கட்டிச்சோலைப் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வேளையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூவரும் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகிழடித்தீவிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வீதியில் முன்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதிய அதேவேளை வீதியினருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரங்களுடன் மோதி வயலுக்குள் விழுந்து நொருங்கியுள்ளது.
பஸ் மோதியதில் வீதியினருகே நின்றிருந்த பனை மரம் மற்றும் வேம்பு மரம் என்பன பிடுங்கி வீசப்பட்டுள்ளன.
இவ்விபத்தில் பஸ் சாரதியும் மற்றும் பயணிகளும் எதுவித ஆபத்துமின்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் விபத்தை விளைவித்த இந்த இரு பஸ்களின் உரிமையாளரும் ஒருவரே என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது.
இவ்விரு விபத்துச் சம்பவங்கள் குறித்தும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.







0 Comments:
Post a Comment