மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்தார்.
மட்டக்களப்பு – வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் திங்கட்கிழமை 24.04.2017 திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உiயாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
சிறுவர் பெண்களின் சமூக நிலைமையை மேம்படுத்துவதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றோம்.
அந்த வகையிலேயே வாகரையில் பெண்கள் சிறுவர் விவகாரங்களைக் கையாள்வதற்காக தனியான செயலகம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெறும்பொழுது அவற்றை பொலிஸ் நிலையம் சென்று அறிக்கையிடுவதற்குத் தயக்கம் காட்டுவதுண்டு.
அந்த சூழ்நிலையை மாற்றி பயமும் வெட்கமுமின்றி இந்த அலுவலகத்திற்கு வந்து அந்தரங்கமாக சுதந்திரமாக தமது முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.
சென்ற ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக 42 முறைப்பாடுகள் பதிவாகி உள்ளன.
அதேவேளை இந்த காலாண்டு கடந்த ஏப்ரல் மாதம் வரை 7 முறைப்பாடுகளே பதிவாகியுள்ளன.
அதேவேளை, வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சென்ற ஆண்டு ஒரேயொரு முறைப்பாடுதான் பதிவாகியிருந்தது.
இது சமூகத்தில் நல்ல மாற்றம். இந்த விடயத்தில் ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பெடுத்து சமூகச் சீரழிவுகளை தடுப்பதிலும் ஒழிப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்.
தனிப்பட்ட முறையிலே பொலிஸ் அதிகாரிகளோ ஏனைய அரச அதிகாரிகளோ சிறுவர்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்றிருந்து விட முடியாது” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகர் சமன் யட்டவர, யுனிசெப் மாவட்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் றீபின்ஸியா பற்றர்சன், சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் யுனிசெப் மற்றும் சர்வோதயம் ஆகிய நிறுவனங்களின் அமுலாக்கத்துடன் சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்த அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment