12 Apr 2017

ஆதிவாசிகளுக்கும் ஆசனம் வழங்குமாறு கோரிக்கை

SHARE
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தமக்கும் ஆட்சியதிகாரத்தில் பங்குகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் ஆசனத்தை ஒதுக்கித் தருமாறு ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவும்  தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரி நிற்கின்றனர்.

இது விடயமாக திருகோணமலை மூதூர் பிரதேச ஆதிவாசிக் குடிகளுக்கான இணைப்பாளர் கே. ஸ்ரீலால் தலைமையில் ஆதிவாசிகளின் சந்திப்பு பாட்டாளிபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

அங்கு ஆதிவாசிகள் கருத்துத் தெரிவிக்கையில்@ தமது பாரம்பரிய வாழ்வாதாரத்தைச் செய்து ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்வதில் தங்களது ஆதி வாசி சமூகம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தங்களது பாரம்பரியத் தொழிலான வேட்டையாடுதல், தேன் எடுத்தல், விடுகு சேகரித்தல் என்பனவற்றை மேற்கொள்ளும் போது அவற்றுக்கு பல தடைகள் உள்ளதாகவும் பொலிஸாரும் வன இலாகா அதிகாரிகளும் தங்களை கடுமையாக நடத்துவதாகவும் குறைப்படுகின்றனர். சிலபோது தாம் கைது செய்யப்படுவதாகவும் சட்ட நடைமுறைகளில் பரீட்சயமில்லாத தமது சமூகம் அதனால் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை தமக்கிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த ஆதிவாசி சமூகம் தாங்கள் நகரப்புற அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுவதாக உணரவதாகவும் கூறுகின்றனர்.

தேர்தல் காலத்தில் மாத்திரம் தங்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களை நாடிவரும் அரசியல்வாதிகள், தமது ஆதிவாசி சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான எதுவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை எனவும் அவர்கள் குறைப்படுகின்றனர்.
தாங்கள் நீண்டகாலமாக முகம்கொடுத்து வரும்  பிரச்சினைகளையும் இன்னல்களையும் கருத்திற்கொண்டு தாங்களாகவே முன்வந்து மூதூர் கிழக்கில் ஆதிவாசிகள் நலன்புரிச் சங்கத்தை ஸ்தாபித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: