15 Mar 2017

மந்த கதியில் வினைத்திறனற்று இயங்கும் மட்டக்களப்பு மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டை மறுசீரமைக்கத் தீர்மானம்.

SHARE
மந்த கதியில் வினைத்திறனற்று இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டை மறுசீரமைக்கவும் வினைத்திறனுள்ளதாக்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே மேற்சொன்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீன்பிடித் திணைக்களம் தொடர்பான விடயம் ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம், அரச மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு காரியாலயம் இயங்குவதில்லை என்றும், அங்கு ஏற்கெனவே இயங்கி வந்த ஐஸ் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

அதிகளவில் மீனவர்களைக் கொண்டதும் நாட்டின் தேசிய உற்பத்திக்கு மீனை பெருமளவில் பங்களிப்புச் செய்வதுமான மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்தித் திறன் மோசமடைந்துள்ளது.

இங்கிருந்த அரசாங்க ஐஸ் தொழிற்சாலை மூடப்பட்டுள்ள அதேவேளை தனியார் ஐஸ் தொழிற்சாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட ஒரு செயலா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மீனவர்களுக்கான தேவைகளின் அடிப்படையில் இந்த அரச தொழிற்சாலை இயங்கி வந்தது. ஆயினும் தற்போதைய அதன் இயங்கு திறனற்ற நடவடிக்கையால் இந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த விடயம் தொடர்பாக திணைக்கள உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், அத் தொழிற்சாலையையும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தையும் மீண்டும் வினைத்திறனான முகாமைத்துவத்துடன் இயங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச அபிவிருத்திக்குழு தீர்மானிப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பணித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: