மட்டக்களப்பு, வவுணதீவில் விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வவுணதீவு மகளிர் மண்டபத்தில்
ஞாயிற்றுக்கிழமை 05.03.2017 நடைபெற்றது.
பிரதேச ஊடகவியலாளர்களும் வவுணதீவு சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அன்னாரை நினைவு கூர்ந்து பேருரையும் இடம்பெற்றது.
நினைவுப் பேருரையினை வவுணதீவு விவசாய அமைப்பின் தலைவரும் சமூக சேவகருமான எஸ். அழகரெட்ணம் நிகழ்த்தினார்.
கிழக்கு மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டாவது தமிழ் ஊடகவியலாளரான இரத்தினசிங்கம் 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி கரடியனாறு விவசாயப் பண்ணையில் முகாமமைத்திருந்த விஷேட அதிரடிப்படையினரால் அவரின் சொந்த ஊரான வவுணதீவில் வைத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
எழுத்தாளர் சரவணமுத்து இரத்தினசிங்கம் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரியின் நிருபராக கடமை புரிந்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள், தேவைகள், குறைநிறைகள் அனைத்தையும் துணிச்சலுடனும் துடிப்புமனும் நடுநிலையாக வெளிக்கொண்டு வந்தவராவார்.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தேவராசா எனும் ஊடகவியலாளர் 1985ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் 25ஆம் திகதி அக்கரைப்பற்றில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இவரது கொலையே யுத்தம் தொடங்கியதில் இருந்து கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் படுகொலை என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments:
Post a Comment