மாணவர் சமுதாயம் எதிர்கால இலங்கையை வீதி விபத்து எனும் மோசமான அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணத்திற்கான சமூகப் பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து, விபத்துக்களை தடுத்தல், போக்குவரத்து விதிமுறைகளும் வீதி ஒழுக்கங்களும் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (20.02.2017) இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது அவர் தெரிவித்ததாவது, வீதிப் போக்குவரத்தை எவரும் தவிர்த்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அது தற்கால சூழ் நிலையில் அதுவும் அதி நவீன பாதைகளிலும் வாகனங்களிலும் பயணிப்பது அவசியமான ஒன்றாக இருந்து கொண்டிருக்கின்றது.
முற்காலத்தில் இத்தகைய நவீன பாதைகளும் வாகன வசதிகளும் இல்லை.
பொருளாதார வளர்ச்சி காரணமாகவும் தேவையின் நிமித்தமும் இந்த அவசர யுகத்தில் தனி நபர்களுக்கென்றே வாகனங்கள் கிடைத்து விட்டன.
அதனால் பணங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டன.
ஆனால், இந்த நவீனப் பாதைகளிலும் சொகுசு வாகனங்களினாலும் ஏற்படுகின்ற விபத்துக்களினால் ஈடு செய்ய முடியாத உயிரிழப்புக்களும் காயங்களும் அங்கவீனங்களும் இடம்பெற்று விடுகின்றது.
விபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு எமது சமயோசித புத்தியைப் பாவிக்க வேண்டும்.
விபத்துக்களினால் உண்டாகின்ற பொருளாதார இழபபுக்களை சிலவேளை ஈடு செய்யக் கூடியதாக இருந்தாலும் விலை மதிப்பற்ற உயிர் போனால் அதனை ஒரு போதும் ஈடு செய்யவே முடியாது.
இலங்கையின் வீதிப் போக்கு வரத்துப் பணிப்பாளராக நான் மூன்று வருடங்கள் பணியாற்றியிருக்கின்றேன்.
நாளொன்றுக்கு 105 தொடக்கம் 115 வீதி விபத்துக்கள் இலங்கையின் நாலா பங்கங்களிலும் எந்த நாளும் இடம்பெறுகின்றன.
இவற்றில் 25 சதவீமான விபத்துக்கள் உயிரிழப்புக்களையும் அங்கவீனங்களையும் ஏற்படுத்துகின்ற பாரதூரமானவையாக இருக்கின்றன.
மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் என்பது பயங்கரமானது.
அவசரத்தினாலும் அவதானக் குறைவினாலும் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களே பயங்கரமானவை.
நான்கு மணித்தியாலத்துக்கு ஒருவர் பலியாகின்றார். நாளொன்றுக்கு ஆறு பேரும் ஒரு மாதத்தில் 180 பேரும் வருடத்தில் 2040 பேரும் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழப்போரில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கற்பிணித் தாய்மார், வயோதிபர்கள், புத்திஜீவிகள் என எல்லோரும் அடங்குகின்றனர்.
வீதி விபத்துக்கள் இன மத மொழி பிரதேச பேதம் பார்த்து இடம்பெறுவதில்லை.
எனவே, இத்தகையதொரு துரதிருஷ்ட நிலைமையை இல்லாதொழிப்பதற்கு எதிர்கால இலங்கையை ஆளப்போகின்ற தற்கால மாணவர் சமுதாயம் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
முடிந்தளவு வீதி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவருக்கும் வீதி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்க வேண்டும்.” என்றார்.
0 Comments:
Post a Comment