28 Feb 2017

எங்களில் பலர் தமிழர்களில்லாமல் வாழ்கிறோம் - கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்

SHARE
எங்களில் பலர் கையொப்பமிடுவதிலிருந்து, பெயர் வைப்பது வரை தமிழர்கள் இல்லாமல் வாழ்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தமிழில் கையொப்பமிடுபவர்களாக மாறிக்கொள்ளும் போது அடுத்தடுத்து எல்லாம் மாறிக்கொள்ளும்
மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

உலக தாய்மொழி தினத்தை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தமிழ்மொழி, பண்பாடு,அடையாளம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வாசகர் வட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன்,
தமிழ் சமூகம் தனது மொழியையும் பண்பாட்டையும் இழந்து போகின்ற சமூகமாக இன்று காணப்படுகின்றது. மாற்றுமொழியையும், மாற்று இன மக்களின் பண்பாட்டையும் வரித்துக்கட்டிக்கொண்டு தனது இனத்தின் அடையாளத்தை தொலைக்கின்ற விட்டில் பூச்சியாக உயிர்த்தெழுந்திருப்பதை பார்க்கும் போது மனம் வேதனைப்படுவது மட்டுமல்ல, ஏன் இந்த இனம் திசைமாறிக் கெட்டுப்போகிறது என்ற ஆச்சரியமும் மேலெழுந்து நிற்கிறது.

தாய்மொழி தினம் உலகத்திலுள்ள மொழியையும், பண்பாட்டையும் கொண்டாடும் நாள், அந்தந்த இனத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள். இந்த நாளில் இருந்து எமது மொழியை மீட்டெடுப்பதற்கான நாளாக நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.

எல்லோரும் ஆங்கிலம் பேசுவதை விரும்புகிறார்கள். அதுதான் நாகரீகம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதை விட எமது மொழியில் அற்புதமான நாகரீகமும் செழுமையுமுள்ளது. இன்று மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் உலகில் தோன்றிய மூத்த மொழி என்று தமிழைப்பிரகடனப்படுத்துவதற்கு மூத்த குடிமகன் ஒருவனின் உடலையும், அதிலிருந்து வெளிவரும் ஓசையையும் ஆதாரங்காட்டி தமழ் மொழியில் சிறப்பை ஆதாரம் காட்டுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் மொழியை அழிப்பவர்களாக, சிதைப்பவர்களாக மாறி வருகிறோம்.

உலகில் ஏறக்குறைய ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. அவை அதன் வல்லமையுடன் உயிர் வாழவேண்டும் என்பதில் என்னுள் இரண்டு கருத்தில்லை. எனினும் அந்தந்த மொழியை வேறு மொழி ஊடுபாய்ந்து அழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கக்கூடாது என்றே சொல்கிறேன். எங்களில் பலர் கையொப்பமிடுவதிலிருந்து, பெயர் வைப்பது வரை தமிழர்கள் இல்லாமல் வாழ்கிறோம். முதல் கட்டமாக தமிழில் கையொப்பமிடுபவராக நாம் மாறும் போது அடுத்தடுத்து எல்லாம் மாறிக்கொள்ளும்.

எனவே திசைமாறிப்போகின்ற புதிய தலைமுறையினரிடத்தில் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்த மாணவர்கள் வாசகர் வட்டங்களினூடாக கலை, இலக்கியம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் க.ஜெகதீஸ்வரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் டுகேந்தினி சிறிஸ்கந்தராசா, மற்றும் சாதாரண தர, உயரதர மாணவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். 






SHARE

Author: verified_user

0 Comments: