23 Feb 2017

தொழில் பயிற்சியினை நிறைவு செய்தோரின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும்

SHARE
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும் வவுணதீவு மாதர்
அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை 22.02.2017 நடைபெற்றது.

தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள் மற்றும் உடைகள், அலங்காரப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோம் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகள் இந்த உற்பத்திகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் கண்காட்சி மற்றும் விற்பனையைத் துவக்கி வைத்து உரையாற்றுகையில்@ இவ்வாறான டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தோர் தொழில்வாய்புகளைப் பெறும்போது அதற்கான சான்றிதழ்களும் உள்ளதால் அது அத் தருணத்தில் பேருதவியாக அமையும்.

பெரும்பாலான பெண்கள் சாதாரணதரம் உயர்தரம் கற்றபின் வீட்டிலே வேலையின்றி இருக்கும் நிலை பிரதேச கிராமப் புறங்களில் காணப்படுகின்றது. இந் நிலைமையை மாற்ற வேண்டும்.

இப் பிரதேசத்திலிருந்து நகர் பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் குறைந்த வருமானத்தில்  பெண்கள் தொழில் தேடிச் செல்கின்றனர்.

இவர்களிடமிருந்து குறித்த தரப்பினர் கூடிய சேவைகளைப் பெற்றுக்கொண்டு மிகக் குறைந்த ஊதியத்தையே வழங்கிவருகின்றனர்.

இதனால்  அவர்களின் வேலைக்குரிய வருமானம் கிடைக்காமல் போகும் நிலை காணப்படுகின்றது.

இத்தகைய பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவு செய்தபின் அதன் மூலம் சாதாரணமாக வீட்டில் இருந்து கொண்டே உயர் வருமானத்தை பெறமுடியும். முயற்சிதான் பிரதானம்” என்றார்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு,  மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம். பிரேம்குமார், திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், செயலக கணக்காளர் வி. வேல்ராஜசேகரம் உட்பட பயிற்சியை நிறைவு செய்து கொண்ட யுவதிகளும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: