18 Jan 2017

மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது - எழுச்சியுடன் 28ஆம் திகதி நடைபெறும்

SHARE
மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின்
இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி இந்த நிகழ்வினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ரி.வசந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த இணைத்தலைவர் வசந்தராஜா,
ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் ஆராயும் முகமாகவும், இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு முன்பாகவும் கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வு நடத்தப்படவேண்டும் என கடந்த வருடம் தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்தது.
அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எழுக தமிழ் நடைபெறும் தினத்திற்கு அண்மித்த தினத்தில் உழவர் தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விழா சிறப்பாக நடைபெற இடமளிக்கும் வகையிலும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பதில் பாடசாலை நாள் ஒன்றை எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள அதே தினத்தில் நடாத்துவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாடசாலை நிகழ்வுகளுக்கு எழுக தமிழ் குந்தகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த நிகழ்வினை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 9.00மணிக்கு இரண்டு இடங்களில் இருந்து ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கல்லடி பாலத்தில் இருந்து எழுச்சி ஊர்வலம் ஒன்றும் நடைறெவுள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கே.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: