மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் மற்றும் வடிச்சல் குளங்களை இணைத்து விவசாயத்தை மேம்படுத்தவும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கவும் மேலும் மாவட்டம்
முழுவதற்குமாக குடிநீர் விநியோகிக்கவும் கூடியதான பெருந் திட்டம் அடுத்தாண்டு தொடங்கவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத் தடுப்பு சம்பந்தமாகக் கேட்டபோது அவர் புதன்கிழமை இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கூறிய அவர், வருடாவருடம் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பின் பாரிய குளங்களில் ஒன்றான உறுகாமம் குளமும் அதற்கருகே அமைந்துள்ள வடிச்சல் குளமும் இணைக்கப்பட விருக்கின்றது.
இவ்விரு குளங்களையும் இணைப்பதற்கான பாரிய நீண்டகாலத் திட்டம் ஒன்றிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்திலே ஆரம்பத் திட்டவரைவு மற்றும் ஆய்வு வேலைகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
உறுகாமம் மற்றும் வடிச்சல் குளங்களை இணைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல நகரங்கள் மற்றும் வாகரை வரையுள்ள கிராமங்களுக்குமாக 5 இலட்சம் குடியிருப்புக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் வரையப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன் வருவருடம் இந்த மாவட்டம் எதிர்கொள்கின்ற வெள்ளப் பெருக்குப் பதிப்புக்களை முற்றாகவே இல்லாமலாக்க முடியும் என்றும் சாத்தியவள அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஏறாவூர் தொடக்கம் சித்தாண்டிப் பகுதி எதிர் நோக்கம் வெள்ள நிலைமை சீர் செய்யப்பட்டு விடும் என்றாரவர்.
இதேவேளை இவ்விரு குளங்களையும் இணைக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கான நீரைத் தேக்கி வைத்து சதாகாலமும் தங்கு தடையின்றி நீர்ப்பாசனம் செய்ய முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல். ஜவ்பர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment