1 Dec 2016

பிக்குவின் முறைப்பாட்டுக்கு பதிலளிக்க பொலிஸ் நிலையம் சென்றார் வியாழேந்திரன் எம்பி

SHARE
மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்  எஸ். வியாழேந்திரனுக்கு எதிராக கரடியனாறு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு பதிலளிப்பதற்காக வியாழேந்திரன் எம்பி செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.

வியாழேந்திரன் எம்பி தன்னை அச்சுறுத்தியதான முறைப்பாடொன்று மட்டக்களப்பு மங்களராம விஹாரதிபதியால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நாங்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிப்பவர்கள். எனவே, சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக பொலிஸ் அதிகாரிகளும் நல்லாட்சி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாழேந்திரன் எம்பி கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், ஏறாவூர்ப் பற்று செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரச மரம் உள்ள காணிக்குள் கடந்த 16.11.2016 அன்று அத்துமீறி நுழைந்து விஹாரை கட்ட முனைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

அந்த அரச மரம் உள்ள இடத்தில் புத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் அங்கு இருந்ததாகவும் கூறி சர்சைக்குரிய அம்பிட்டிய  சுமணரத்ன தேரர் தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்து கொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.

ஸ்தலத்திற்கு அம்பாறையிலுள்ள சிங்கள மக்கள் சிலரையும் இந்த பிக்கு அழைத்து வந்திருந்தார்.

பதற்ற நிலைமை நிலவிய வேளையில் அங்கு கரடியனாறு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் ஸ்தலத்திற்கு விரைந்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: