ஏறாவூர் நகரில் அமைந்திருக்கும் பழைய சந்தையை சுமார் 19.3 கோடி ரூபாய் செலவில் அடுத்த வருடம் மே மாதமளவில் நவீன வசதிகளோடு புதிதாகக் கட்டி முடிப்பதற்கான நிருமாணப் பணிகளுக்காக அச்சந்தையை புதிய இடத்திற்கு மாற்றும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ஏ. அப்துல் நாஸர் தெரிவித்தார்.
நவீன பொதுச் சந்தையை நிருமாணித்து முடிக்கும் காலப் பகுதிக்குள் தற்போதைய சந்தையை ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மௌலானா சதுக்கத்திற்கு இடம் மாற்றும் வேலைகள் ஞாயிற்றுக்கிழமை (04.12.2016) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்பப் பணிகளை முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
தற்போதைய சந்தை அமைந்துள்ள காணி ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாயல், மற்றும் ஓட்டுப்பள்ளி மீரா ஜும்மாப் பள்ளிவாயல் ஆகியவற்றுக்குச் சொந்தமானதாகும்.
ஏறாவூர் நகர பொதுச் சந்தையை நவீன சந்தையாக புதிதாக நிருமாணிக்கும் பொருட்டு ஏறாவூர் நகர சபைக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்குமிடையிலான ஒப்பந்தம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் தலைமையில் சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டது.
ஏறாவூர் நகரத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்தப் பொதுச் சந்தையைப் பயன்படுத்துவதோடு மேலும் தூர இடங்களிலிருந்து வருகை தருவோரும் இச்சந்தையைப் பயன்படுத்துவதால் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக இட முக்கியத்துவம் மிக்க சந்தைகளில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது.
0 Comments:
Post a Comment