மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற துணிச்சல் மிக்கவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருந்து
உருவாகவேண்டும் என மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (25) மாலை நடைபெற்ற மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எங்கள் அனைவரையும் மீட்கவந்த யேசு கிறிஸ்து மனிதம் தளைக்க வேண்டும், மனித நேயம் உயரவேண்டும் என்பதற்காக பிறந்து அதற்காக வாழ்ந்து அதற்காக இறந்த அவரின் பிறப்பு நாளிலே மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் மரணித்தது மறக்கமுடியாது. இன்றும் எமது நெஞ்சத்தில் ஓடிக்கொண்டுள்ளது.
இரவு 12 மணி திருப்பலியின்போது ஆண்டவன் ஜேசுவை நாவில் பெற்று அதனை விழுங்குவதற்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்டார். இது மறக்கமுடியாத நிகழ்வாகும்.
அந்த நிகழ்வு இன்று அவரை மாமனிதராக உயர்த்தி நிற்கின்றது. ஏன் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். விசமிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று நாங்கள் அறிவோம். அவரது எதிரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருக்கு ஏன் அத்தனை எதிரிகள் வந்தார்கள் என்று சிந்திக்கும்போது அவர் தமிழினத்திற்காக தமிழ் மக்களுக்காக விசேடமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக குரல்கொடுத்தவர்.
மட்டக்களப்பு மாவட்டதில் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற படுகொலை.இந்த மூன்று இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
துணிச்சல் மிக்க அவரது செயற்பாடுகளே மற்றவர்களின் வெறுப்பினை தூண்டியது. இவ்வாறான மனிதர்கள் வாழக்கூடாது என்றே அவர்களை அழித்துவிட நினைத்தனர்.
அவர் இந்த மண்ணிலே எங்களை விட்டு மறைந்தாலும் அவர் விதைக்கப்பட்டுள்ளார், தமிழ் மக்களுக்கான அவர் கொடுத்த குரல்கள் இன்னும் அழியவில்லை. இன்னும் எங்கள் உள்ளங்களிலும் அது ஒலித்துக் கொண்டுள்ளது.
இவ்வாறான மாமனிதருக்கு அஞ்சலி செலுத்துவது மிகவும் பொருத்தமானது இது தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளை தலைவர்கள். இன்றைய இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான துணிச்சல்மிக்கவர்கள் உருவாகவேண்டும்.
எமது இனத்திற்காக தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்க வேண்டியவர்கள் இன்னும் பலர் முன்னுக்கு வரவேண்டும். அவரது முன்மாதிரியை பின்பற்றவேண்டும்.
இந்த நாளில் அவரைப்போன்று நாமும் துணிச்சலாக நீதிக்காக நேர்மைக்காக குரல்கொடுப்பவர்களாக முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment