மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருட இறுதிக்கான மீளாய்வுக் கூட்டம் இன்று(26) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,
பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டம் ஆரம்பமான போது அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் போது ஊடகவியலாளர்கள் தமது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த நிலையில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அங்கு ஆரம்ப நிகழ்வினை மட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிட்டு செல்லுமாறு அபிவிருத்திக் குழுவின் தலைவர்களினால் பணிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஊடகவியலாளர்கள் தமது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன் அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
மேலும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கூறுகையில், பாராளுமன்ற அமர்வு கூட மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் சாதாரண அபிவிருத்திக் குழு கூட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏன் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
இங்கு நடப்பதை ஏன் முடிமறைக்க வேண்டும். நாங்கள் களவு செய்யவில்லை. ஊடகவியலாளர்கள் புகைப்படம் மட்டும் எடுப்பதற்காக அல்ல. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் எனக் கேள்வி எழுப்பினார்.அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூறுகையில், வழமையாக ஊடகத்துறையினர் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் புதிதாக ஊடகத்துறையினை அனுமதிக்க மறுப்பதன் காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இங்கு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறுகையில், மாவட்ட அபிவிருத்திக் குழுவில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்ற காரணத்தினால் ஊடகங்கள் இங்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கூறுகையில், கூட்டம் முடிந்த பின்னர் தேவையான விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஊடகவியலாளர் சந்திப்பினைச் செய்யலாம் எனத் தீர்மானித்தோம்.
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின் போது மூன்று அதிகாரிகள் தங்களது கையடக்க தொலைபேசியில் இருந்து முகநூலில் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியுள்ளனர். அதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் ஆரம்பத்தில் எடுத்து முடிந்த பின்னர் வந்து கேள்விகளை கேட்கும் போது பதில்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் கூறுகையில், ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்ச்சியுடன் தகவல்கள் வெளியிட வேண்டும். இந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக தகவல் அறியும் சுதந்திரம் என்பது தொடர்பான சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சுதந்திரம் என்பதை நாங்கள் மதிக்கின்றோம். தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் நாங்கள் இடையூறாக இருக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் தகவல்களை பொறுப்புணர்ச்சியுடன் வெளியில் கொண்டு செல்ல வேண்டும்.
தகவல்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தாத வகையில் உண்மையான தகவல்களை கொண்டு செல்லுங்கள். அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் உள்ளதன் காரணமாக நாங்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்வதை தடுக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் இந்த கூட்டங்களுக்கு தடங்கல்கள் இல்லாமல் ஊடக தர்மத்தினை மற்றும் ஊடக ஓழுக்கத்தினை சரியானமுறையில் கடைப்பிடிக்கும் பட்சத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருக்காது எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கான அனுமதியை அபிவித்திக் குழு தலைமைகள் வழங்கியது. இதே வேளை மாவட்டச் செயலகத்தில் ஊடகவியலாளர்கள் தங்களது கடமையினை மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செயற்பாட்டிற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தமது பணியைச் சுதந்திரமான முறையில் மேற்கொள்ள முடியாது என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுவதாகவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(tx.tw)
0 Comments:
Post a Comment