மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணையடி வாவியில் தோணியோட்டி விளையாடிக்
கொண்டிருந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மரணித்ததோடு மற்றையவர் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயானந்தன் நிரோஜன் (வயது 13) எனும் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலத்தில் 8 ஆம் ஆண்டில் கற்கும் சிறுவனே நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
அவருடன் கூடவே தோணியில் விளையாடிய சமயம் வாவியில் தவறி வீழ்ந்து மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்ட விநாயகமூர்த்தி கிஷாந்தன் (வயது 15) எனும் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை இருவருமாகச் சேர்ந்து தோணியோட்டி விளையாடிக் கொண்டிருந்த போது சறுக்கி வாவியில் வீழ்ந்துள்ளனர். அப்போது நிரோஜன் நீரில் மூழ்கிய நிலையில் மரணித்துள்ளான்.
கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் விரைவாகச் செயற்பட்டு கிஷாந்தன் என்ற சிறுவனைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என். அப்துல் கலாம் முன்னிலையில் கோறளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் உடற் கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டபின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment