15 Dec 2016

அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான இடத்தில் இராணுவம் புதிதாக இராணுவ முகாம்

SHARE
அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான  இடத்தில் இராணுவம் புதிதாக இராணுவ முகாம் அமைக்க எடுக்கும் முயற்சியை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.இது தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.


இந்தப்பிரதேசத்தில் உள்ள மக்கள் என்னுடன் தொடர்பு கொண்டு எமது பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக கூறியதற்கு அமைவாக நான் இன்று இந்த இடத்திற்கு வருகைதந்திருந்தேன்.

இங்கு வந்து பார்க்கும் போது எமது மக்களுக்கு சொந்தமான இடங்களிலும், முன்னர்  இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலும் புதிதாக இராணுவ முகாங்களை அமைப்பதற்கான எல்லைகள் இட்ட முகாங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இவ்வாரான புதிய இராணுவ முகாங்களை அமைப்பதென்பது தற்போதைய சூழலில் பொருத்தமில்லாத ஒரு செயற்பாடாகும் என்பதனை உரியவர்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

இந்தப்பிரதேசத்தினை பொறுத்தவரையில் ஏற்கனவே இராணுவ முகாங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது அவ்வாரான சூழலில் இராணுவம் இந்த இடத்தினை தெரிவு செய்து இராணுவ முகாங்களை அமைப்பதென்பது இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களிடையே ஒரு அச்ச நிலையை ஏற்படுத்தி இருப்பதுடன் மீண்டும் ஒரு மோசமான நிலை உருவாகப்போகின்றதா என்ற நிலமையினையும் மக்கள் மத்தியிலே காணக்கூடியதாக உள்ளது.

வடகிழக்கு பிரதேசங்களை பொறுத்த வரையில் பல இடங்களில் உள்ள இராணுவ முகாங்களை மூடி அங்கிருந்து இராணுவம் வெளியேறி இருக்கின்றது ஆனால் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் இன்னும் பொது கட்டடங்களில் இருந்தும், பாடசாலைகளில் இருந்தும் இராணுவம் இதுவரை வெளியேறவில்லை.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் கல்வி வலயத்தில் உள்ள கள்ளியந்தீவு பாடசாலை, ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் உள்ள கண்ணகி வித்தியாலயம், அதே போன்று சம்மாந்துறை செயலாளர் பிரிவிலும் பாரியளவிலான இராணுவ முகாம் அமைக்கப்படுவதுடன், நாவிதன்வெளி, காரைதீவு போன்ற இடங்களிலும் இராணுவ முகாங்கள் தற்போதும் இயங்கிக்கொண்டுதான் வருகின்றது.

இந்த நாட்டில் தற்போது உள்ள அரசாங்கத்தினை கொண்டுவந்தவர்கள் என்ற ரீதியில் எமது மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது அதனடிப்படையிலேதான் மக்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்தும், பாடசாலைகளில் இருந்தும், பொது கட்டடங்களில் இருந்தும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றுவதுடன் இனிமேலும் புதிய இராணுவ முகாங்களை அமைப்பதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.







SHARE

Author: verified_user

0 Comments: