தமிழ் முஸ்லிம் இனக்கலகம் நடக்கும்போது கடத்தப்பட்ட எனது மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இன்றுவரை வாடுகிறேன் என சேர் றாசிக் பரீட் மாவத்தை காத்தான்குடி 3 ஐச் சேர்ந்த அலியார் சுஹதா உம்மா கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும்
குழுமத்தின் அமர்வின் முன்பிரசன்னமாகி தனது மகனக்கு நடந்த சம்பவத்தைப் பதிவு செய்தார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக் குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பி. சுவர்ணராஜா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் மதத் தலைவர்கள், மனித உரிமை ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்த அமர்வில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்@
எனது கணவர் இறந்து ஒரு மாதத்தில் எனது மகன் அப்துல் ஹாதி 1985.05.05 அன்று கடத்தப்படார். கடைச் சிப்பந்தியாக அவர் வேலை செய்தார். காத்தான்குடியிலிருந்து அவர் கல்குடா வழியாக வாழைச்சேனை நோக்கி பயணமாகும்போது பேத்தாழைக் கிராமத்தில் வைத்து அவரைக் கடத்தியிருக்கின்றார்கள்.
கடத்தப்பட்டவர் என்ன ஆனார் என்பது இதுவரைத் தெரியாது. ஆனால் எனது மகன் வருவார் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை.
தமிழ் முஸ்லிம் இனப்பிரச்சினை நடந்த காலத்தில்தான் அவர் கடத்தப்பட்டார்.
எனது மகனின் இழப்புக்காக 15 ஆயிரம் ரூபாய் மாத்திரம் கிடைத்திருக்கிறது. இழப்பீடு பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. எனது மகன் திரும்பி வரவேண்டும் என்பதே எனது எதிர்பாபர்ப்பாகும். அல்லது எனது மகனுக்கு என்ன நடந்தது என்று நான் அறிய வேண்டும்.
எனது மகன் கடத்தப்பட்ட காலத்தில் எனது கணவர் இறந்ததால் நான் எனது இஸ்லாமிய மார்க்கக் கடமையான “இத்தாவை” (4 மாதம் 10 நாட்கள் அந்நிய ஆடவரின் கண்களில் படாமல் மறைந்திருப்பது)நிறைவு செய்ய வேண்டியிருந்தது. அதனால் வெளியில் சென்று எனது மகனைத் தேடிப் பார்த்து விசாரிக்க என்னால் முடியவில்லை.” என்றார்.
மட்டக்களப்பு, அம்பாறை, பொலொன்னறுவை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அனுபவங்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. அதில் சுஹாதா உம்மாவும் இடம்பெற்றிருந்தார்.
0 Comments:
Post a Comment