மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைகளை நாசப்படுத்தும் பூச்சிக் கொல்லி தெளி கருவிகள், பசளை, தொழிநுட்பப் பயிற்சி, மற்றும் உட்கட்டமைப்பு உதவிகளை வழங்கி மரமுந்திரிகைச்
செய்கையாளர்களை ஊக்கப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக மரமுந்திரிகை அபிவிருத்தி உத்தியோகத்தர் கணேசன் மலைமகள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோரிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக மலைமகள் மேலும் தெரிவித்தார்.
இதுவிடயமான திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (19, 20.12.2016) ஆகிய இரு தினங்களும் ஏறாவூர் மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் சார்பான விடயங்களும் ஊக்குவிப்புத் திட்ட வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டதாகவும் மலைமகள் தெரிவித்தார்.
மரமுந்திரிச் செய்கையாளர்களை உள்ளடக்கிய சுமார் 3250 பேரைக் கொண்ட 13 மரமுந்திரிகைச் செய்கையாளர் ஊக்குவிப்புச் சங்கங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.
இந்தச் சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் மரமுந்திரிகைகளை நாசப்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்து தெளி கருவி தலா ஒன்றையாவது வழங்கி உதவுமாறு தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மலைமகள் கூறினார்.
இது விடயமாக தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
தற்சமயம் பெரிய அளவிலான மர முந்திரிகைத் தோட்டங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து விசிறக் கூடிய தெளிகருவி சுமார் 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபாவிற்கிடைப்பட்ட விலையில் இருக்கலாம் என்று மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மரமுந்திரிகை என்பது ஒரு ஆடம்பர உற்பத்தித் தாவரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் மரமுந்திரகைச் செய்கையாளர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த முழுமையான மானியம், உர மானியம், ஊக்குவிப்பு பணம், தொழிநுட்ப உதவிகள் என்பன கடந்த நான்கு வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் டேவிட் நிதர்ஷன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களான ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, கிரான் மற்றும் ஏறாவூர்ப்பற்று உள்ளிட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 8000 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment