அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி
முரளீதரனை, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணா கைது குறித்து படிக்க:முன்னாள் விடுதலைப்புலி தளபதி, கருணா கைது
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 9 கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான வாகனமொன்றை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாரிய நிதி மோசடிகளை ஆராயும் விசேட போலீஸ் குழு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அழைக்கப்பட்ட கருணா அம்மானிடம் போலீசார் வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர்.
பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட அவர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த போலீசார், விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாததால் காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர், அமைச்சு பதவி முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்த போதிலும், அந்த செயலகத்தின் அதிகாரிகள் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்று அறிவித்தார்.
கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரை வரும் 07-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேக நபருக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதி, சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.(BBc)
0 Comments:
Post a Comment