(க.விஜி)
போரதீவுப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வேலைகளுக்கு 124.292 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 43 கிராமசேவகர் பிரிவுகளிலும் 1157 திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக
பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி ஆகியோர்கள் புதன்கிழமை (28) மாலை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது தெரிவித்தனர்.
இவ் நிதியொதுக்கீடு கிராமிய உட்கட்டமைப்பு திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டம், வீடமைப்பு வேலைத்திட்டம், திவிநெகும வேலைத்திட்டம், பிரமான அடிப்படையிலான மூலதன நான்கொடை, மாகாண விஷேட அபிவிருத்தி மூலதன வேலைத்திட்டம், இதர அமைச்சுக்களின் வேலைத்திட்டம் ஆகிய ஆறு(6) வேலைத்திட்டங்களுக்காகவே இவ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிரதேச ஒருங்கிணைப்பு இணைத்தலைவர்கள்ளன.
இக்கூட்டத்தில் கல்வி, விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், உள்ளுராட்சி, மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி, மீன்பிடி, வீடமைப்பு, வனபரிபாலனம், வனஜீவராசிகள், போக்குவரத்து, உட்பட பல பிரச்சனைகளுக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும், ஆலோசனைகளும் , மீளாய்வுகளும், இக்கூட்டத்தில் வழங்கப்பட்டன.
யுத்தத்தினாலும், யானைகளினாலும் அதீக இழப்புக்களை சந்தித்த போரதீவுப்பற்று பிரதேசத்தை அபிவிருத்தி உட்கட்டமைப்புக்களுடன் கட்டியெழுப்ப வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் இதன்போது முன்வைத்தார்.
இதற்கு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன்தான் போரதீவுப்பற்று பிரதேசத்தை கட்டியெழுப்ப முடியும் . இலங்கை அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களிடம் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சனைகளை எத்திவைத்துள்ளோம். இதன்பிரகாரம் 2017 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற அமைச்சு, இந்திய அரசாங்கம் ஆகியவற்றுடன் இப்பிரதேசத்திற்கு 450 வீடுகள் 2017ஆம் ஆண்டில் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.
போரதீவுக் கோட்டத்தில் உள்ள ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, காக்காச்சிவட்டை, உட்பட 11 பாடசாலைகளுக்கு பாடசாலைகளில் நீண்டகாலமாக அதிபர்கள் நியமிக்கப்படவில்லை என பெற்றோர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.
இதற்கு போரதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் பதில் தெரிவி க்கையில் எமது வலயக்கல்வி பணிப்பாளர் நான்கு தடவைகள் வலயத்தில் நிலவும் அதிபர் நியமனம், கணித, விஞ்ஞான ஆசிரியர் பிரச்சனைகளை மாகாண கல்விப்பணிப்பாளரிடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளார். எனவே மாகாண கல்விப்பணிப்பாளர் அதிபர், ஆசிரியர் நியமனங்களை எமது வலயத்திற்கு ஒதுக்கீடு செய்தால் பிரதேசத்தில் பாடசாலைகளின் பிரச்சனை தீர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு இணைத்தலைவர் ஞா.ஸ்ரீநேசன் குறிப்பிடுகையில்… அதிபர், ஆசிரியர் பிரச்சனை சம்பந்தமாக எமது மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபையில் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் பிரதேசத்தில் உள்ள கல்விப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். எனத் தெரிவித்தார்.
அத்துடன் பழுகாமம் கண்டு மகாவித்தியாலயத்தில் உயர்தரப்பிரிவில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை 2017 ஆம் ஆரம்பிக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பின கோ.கருணாகரம் கோரிக்கை விடுத்தார். இதனையும் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் வேலைத்திட்டங்களை ஒப்பந்தகாரர்கள் சமூக சிந்தனையாக அவ்வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.அப்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். பிழையான முறையில் ஒப்பந்த வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் நாங்கள் அவர்களை அடையாளப்படுத்தி பரிசீலனை செய்து, தரமான ஒப்பந்தக்காரர்களிடம் வேலைகளை வழங்குவற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இப்பிரதேசத்தில் யானைப்பிரச்சனை சம்பந்தமாக யானைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தாந்தாமலை தொடக்கம் மங்களகம கிராமம் வரையும் யானைகள் உள்நுழையும் பாதையை அளவீடு செய்து வன ஜீவராசிகள் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். தற்போது மூன்று கிலோமீற்றர் யானைவேலி அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாழைச்சேனை, வாகரை வரையும் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி நாங்கள் 11பேர் கடைமையாற்றுகின்றோம். நாங்கள் 24 மணித்தியாலம் தங்கியிருந்து கடைமை புரிவதற்கு நிரந்தர கட்டிடம் இல்லாமல் உள்ளது என என வெல்லாவெளி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பகாரி ஏ.கலீம் தெரிவித்தார்.
இதற்கு பிரதேசத்தில் உள்ள அரசகாணியை வழங்குவதற்கு பிரதேச செயலாளருக்கு பிரதியமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் 8000 பேருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிசாரும், போரதீவுப்பற்று பிரதேச சபையும்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான வீதியை போடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுபானசாலைகளை புதுப்பிப்பதற்கு எந்தவொரு பொது அமைப்புக்களும் புதுப்பித்தலுக்கு கடிதம் வழங்க கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கள் சுட்டிக்காட்டி பேசினார். இதனை ஏற்றுக்கொண்ட இணைத்தலைவர்கள் இந்த விடயமாக ஆலயபரிபாலன சபை,கிராம அபிவிருத்திச்சங்கம், மகளீ அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகம்,போன்றன விழிப்பாக செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது பிரதேசத்தை பொருளாதார உட்கட்டமைப்பில் கட்டியெழுப்ப முடியும். பொதுஅமைப்புக்கள் விழிப்படையாமல் இருந்தால் எமது மாவட்டம் இன்னும் வறுமையடையும் எனத் தெரிவித்தார்கள்.
இப்பிரதேசத்தில் மக்களின் தேவையறிந்து உழைத்து, மக்களுக்கு திருப்தி கரமான கடமையை செய்த இலங்கை மின்சாரசபை,தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபைக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு எதிர்வரும் காலத்தில் மக்களுக்கு சேவை செய்து நல்மதிப்பை பெறுவதற்கு ஏனைய நிறுவனங்கள் ,திணைக்களங்கள் தயாராக இருக்கவேண்டும் என இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment