6 Nov 2016

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களுக்கான சாட்சியங்கள் நிரூபணமாக இருக்கின்ற போதிலும் நீதி கிடைக்கவில்லை தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட அதிகாரி சாந்த பத்திரன

SHARE
தாங்கள் இழைத்த கொடுமைகளை செய்யவில்லை என்று கூறி மறுத்தல் என்பதே உண்மையைக் கண்டறியும் விடயத்தில் உள்ள பிரதான தடையாகும் என தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட அதிகாரி சாந்த பத்திரன தெரிவித்தார்.
நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் உண்மையைக் கண்டறிதலுக்கான மாவட்ட சர்வமதக் குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (நொவெம்பெர் 06, 2016) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சாந்த பத்திரன@ வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுக்கும், அசாதாரண சம்பவங்களுக்குமான சாட்சியங்கள் நிரூபணமாக இருக்கின்றன.
யுத்த சூழ்நிலையில் படையினரிடம் அல்லது பொலிஸாரிடம் தமது பிள்ளைகளை தாங்களாகவே அழைத்துச் சென்று பெற்றோரும் உறவினர்களும் ஒப்படைத்தார்கள்.

எந்த அதிகாரிகளிடம் தாங்கள் தங்களது பி;ள்ளைகளை ஒப்படைத்தார்கள் என்பதும் அது எந்த இடத்தில் வைத்து நடந்தது என்பதும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நன்கு தெரியும்.

பின்னாட்களில் தங்களது பிள்ளைகள் எங்கே என்று உரிய அதிகாரிகளிடம் கேட்கும்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அதிகாரிகள் கையை விரித்து பதிலளிக்கின்றார்கள்.

இப்படிப் பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்க முடியுமா? அப்படியென்றால் எமது நாட்டிலுள்ள நீதியால் என்ன பிரயோசனம் ? நாட்டிலுள்ள சட்டத்தின்படி தங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்கு நிரூபணமான சாட்சிகள் இருக்குமாயின் அந்தக் குற்றமிழைத்தவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி நம்பிக்கை தரும் விதத்தில் ஏதாவது நமது நாட்டில் நடக்காததுதான் நம்முன்னாலுள்ள பிரச்சினையும் அவ நம்பிக்கையுமாகும்.

உண்மையைக் கண்டறிவதற்கான சகல உரிமைகளும் நாட்டுப் பிரஜைகளுக்கு இருக்கின்றது. அது பற்றி ஆராய வேண்டும். அதற்காக நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதனை நாம் காலத்தின் தேவை கருதியும் நாட்டின் எதிர்கால நன்மை கருதியும் செய்தாக வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை அந்தத் துயரத்திலிருந்து விடுவிப்பதற்கான வழிவகைகள் உலகில் யுத்தம் இடம்பெற்ற வேறு பல நாடுகளில் யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால நீதி காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதைப் போல நாமும் செயற்பட்டு துயரமற்ற தேசமாக இந்த நாட்டை வழிநடத்த வேண்டும்.

இனிமேலும் இன முரண்பாடுகள் கூர்மையடைந்து செல்லாதவாறு இந்த நாட்டில் வாழும் அனைவரும் அடுத்தவரின் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
இந்த ஒன்று கூடல் செயலமர்வில் மட்டக்களப்பு, பொலொன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து சர்வமதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களும் தேசிய சமாதானப் பேரவையின் அதிகாரிகளும் பங்குபற்றினர்.





SHARE

Author: verified_user

0 Comments: