சங்க காலத்தில் எமது பெண்கள், தமிழர்கள் எவ்வாறு இருந்தனர் என்பது பற்றி அழகாக இலக்கியங்களிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் வாசிக்கின்றபோதே விளங்கிக் கொள்ள முடியும்.
வாசிப்பு என்பது மனிதனுக்கு அவசியமானதொன்று அதன்மூலமாக பூரணமான அறிவினை பெறமுடியும். ஆனால் தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியினால் வாசிப்பு இல்லாமல் போயிருக்கின்றது. இன்னோர் பக்கம் கலாசாரமும் சீரழிந்து கொண்டிருக்கின்றது.
பெண்களில் பலருக்கு தமிழர்களது பாரம்பரிய உடையான சாறி அணிவதற்கு தெரியாது. அதனை கௌரவமாக சொல்லுகின்ற இனமாக மாறியிருக்கின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசார திணைக்களமும் இணைந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடாத்திய பிரதேச தமிழ் இலக்கிய விழாவில் தலைமையுரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பெண் என்பவளுக்கு சாறி அணிவதற்கும், சமையல் செய்வதற்கும், தையல் செய்வதற்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய பெண்களுக்கு இதில் சிலவிடயங்கள் செய்ய தெரியாது. அதனால் வெட்கப்படவேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.
பண்பாடு, பாரம்பரியம், விழுமியங்களை பாதுகாப்பதற்குதான் இலக்கிய விழா, கலாசார விழா என்பது நடாத்தப்படுகின்றது. இதன்மூலமாக இடைஇடையே உயிர்ப்பிக்க முடிகின்றது. இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கின்றபோதுதான் தமிழ் உயிர் வாழ்கின்றது என்பது புலனாகிறது. மாணவர்கள் மூலமாகவே பாரம்பரியம், பண்பாடுகளை கொண்டுசெல்லவேண்டும். இதற்கு இவர்களை செதுக்கும் சிற்பிகளாக இருக்கின்ற ஆசிரியர்கள் ஈடுபாடு காட்டவேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment