பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை சுதந்திரமாகப் பதிவு செய்து தீர்வு காண்பதற்கென்றே பொலிஸ் நிலையங்களில் சிறுவர் பெண்கள் பணியகம் பொலிஸ்
நிலையத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணானாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பணியகத்துக்கான கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்து அதிகாரிகள் சமூகப் பிரதிநிதி;கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
வாகரைப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான அனுஷ செனாலி பியதாஸ தலைமையில் ஞாயிறன்று (ஒக்ரோபெர் 09, 2016) இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தினேஷ் கருணானாயக்க@ மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பின் தங்கியுள்ள வாகரைப் பிரதேச மகளிருக்கும் சிறுவர்களுக்குமாக சேவையளிப்பதற்கென புதிதாக சிறுவர் மகளிர் பணியகத்தை நாம் ஆரம்பிக்கின்றோம்.
டிசெம்பெருக்குள் இந்தப் பணியகம் இயங்கத் தொடங்கி விடும். எனவே, இது பொலிஸ் நிலையத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதால் எது வித அச்சமும் பயமுமின்றி பெண்களும் சிறுவர்களும் இந்தப் பணியகத்துக்கு வந்து தமது முறைப்பாடுகளையும் தேவைகளையும் கூறி நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தப் பணியகத்தில் எந்நேரமும் பெண் பொலிஸாரே பணிபுரிவார்கள். அதனால் அவர்கள் முறைப்பாட்டாளர்களான பெண்களினதும் சிறுவர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உன்னத பொலிஸ் சேவையின் நன்மைகளை உங்களுக்குப் பெற்றுத் தருவார்கள்.
எனவே, பெண்களும் சிறுவர்களும் பொலிஸ் நிலையம் செல்கின்றோம் என்ற பயமோ அச்சமோ இன்றி அவர்களுக்காக சேவை வழங்கக் காத்திருக்கும் இந்தப் பணியகம் பிரதேசத்திலுள்ளவர்களுக்கு மிவும் நன்மையளிக்கும் என நான் நம்புகின்றேன்.” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 20 இலட்ச ரூபா நிதியுதவியுடன் சர்வோதய நிறுவனம் சிறுவர் மகளிர் பணியகத்துக்கான கட்டிட நிர்மாண வேலைகளை அமுலாக்கம் செய்கிறது.
இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக தயானந்த, சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், திட்ட முகாமையாளர் பி.டி. மேரி எவாஞ்ஜலின், கணக்காளர் விக்கிரமன் கவிப்பிரியா, யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் நலனோம்புகை அலுவலர் எஸ். ரவீந்திரன் உட்பட சமயப் பெரியார்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment