இந்த நாட்டில் எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார்.
திங்களன்று (ஓக்ரோபெர் 24, 2016) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தை அமைப்பதற்கென உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலமாக 81.4 மில்லியன் ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளது.
10 மாத காலத்தில் கட்டி முடிக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலையம் ஏக காலத்தில் சுமார் 100 அலுவலர்கள் பயிற்சி பெறக்கூடியதாகவும், அதேவேளை சுமார் 40 பேருக்கு வதிவிடப் பயிற்சிகளை அளிக்கக்கூடியதான வசதி வாய்ப்புக்களோடும் நிருமாணிக்கப்படவுள்ளது.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய சம்பந்தன்@ “ தமிழர்கள் முஸ்லிம் மக்களை ஏமாற்றி வடக்கு கிழக்கில் வாழ முடியாது அதேபோன்றுதான் முஸ்லிம் மக்கள் தமிழ் சமூகத்தை ஏமாற்றி கிழக்கு மாகாணத்திலோ அல்லது வடக்கு கிழக்கில் எங்கணுமோ வாழ முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றாக இணைந்து எமது உரிமைகளைப் பெறுவதற்கு மற்றவர்களின் உரிமைகளை மதித்து அந்த மதிப்பின் அடிப்படையில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுத்து வாழ வேண்;டும்.
இதற்காக என்னென்ன தியாகங்களைச் செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டும். இதன் மூலம் எங்கள்; மத்தியிலே உள்ள கசப்பான உணர்வுகளை அகற்றி மக்களை ஒற்றுமைப் படுத்தி பிரிந்து போன சமூகங்களை ஒற்றுமையின்பால் வழிகாட்டவேண்டியது தலைவர்களுடைய முழுமுதற் கடமை. நாம் சார்ந்துள்ள ஒரு இனத்தை பிரபல்யத்துக்காக மட்டும் கருத்திலெடுத்து நாம் கருத்துக் கூறவோ போராடவோ முடியாது.
ஒட்டு மொத்த ஒடுக்கபப்ட்ட சிறுபான்மைச் சமூகங்களுக்காக நாம் போராட திடசங்கற்பம் கொள்வோம். யாரும் எவருக்கும் அநீதி இழைப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
ஏனென்றால் அநீதியால் நாங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.
ஒரு புதிய அரசியல் சாசனம் உருவான பின்னர் இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள் அனைவரும் அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் சம உரிமையுடன் சமத்துவமாக வாழவேண்டும் அதுதான் எங்களுடைய குறிக்கோள்.” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் ஆறாவது மிகப் பெரிய விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணையாக இயங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணை கடந்த 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்டு பாழடைந்து தூர்ந்து போனது.
0 Comments:
Post a Comment