12 Oct 2016

தடப்பட்டு வந்த வீடெரித்த சந்தேக நபர் 52 நாட்களின் பின்னர் வீட்டுக் கூரைக்குள் மறைந்திருந்த நிலையில் கைது

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வீடொன்றை தீயிட்டுக் கொளுத்திய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த நபர் அம்பாறை மாவட்டத்தின்
அட்டப்பள்ளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைந்திருந்த சமயம் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (ஒக்ரோபெர் 12, 2016) அதிகாலை ஒரு மணியளவில் மேற்படி சந்தேக நபர் மறைந்திருப்பதாகக் கருதப்பட்ட அட்டப்பள்ளம், சமாதானக் கிராமம் நிந்தவூரிலுள்ள வீட்டைச் சுற்றி வளைத்து பொலிஸார் தேடுதல் நடத்தினர்.

அப்பொழுது சந்தேக நபர் கூரைக்குள் பதுங்கியிருந்தவாறு காணப்பட்டார். அவர் பாய்ந்தோட முற்பட்டபொழுது பொலிஸாரால் சாதுரியமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பாலையடித்தோணா கிராமத்தில் நாகப்பன் கிட்ணப்பிள்ளை என்பவரின் வீடு முற்றாக எரிக்கப்பட்டது. இதன்போது வீட்டிலிருந்த உடமைகளும் தீயினால் அழிக்கப்பட்டிருந்து.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த தேவராஜா வினோஜன் (வயது 24) என்பவரே சுமார் 52 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூருக்கு கொண்டு வரப்பட்டுள்ள சந்தேக நபரை புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி என்.எஸ். ஆரியசிங்ஹ வின் நெறிப்படுத்தலில் ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ற் ஈஸாலெப்பை  பதூர்தீன் தலைமையில் சென்ற எம்.ஏ.எம். அஸீஸ் மிஸ்பாஹ், எம்.ஐ. அப்துல் றஸ்ஸாக் ஆகியோரடங்கிய குழுவினரே சந்தேக நபரை சாதுரியமாகக் கைது செய்திருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: