இளையோருக்கு மரியாதையை வழங்கினால் எதிர்காலத்தை அவர்கள் சிறப்பாக வழி நடாத்துவார்கள், இளையோருக்கு மரியாதை செய்யாததாலும், மூத்தோருக்கு அன்பு செலுத்தாததாலும் இந்த உலகம்
அமைதியிழந்து தடுமாறிக் கொண்டிருக்கின்றது என இந்திய மனவளக் கலை பேராசிரியை பிரம்ம குமாரி ஜான்சி ராணி ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் மட்டக்களப்பு பாசிக்குடா ஆன்மீக மனவளக்கலை கூடத்தில் திங்கள் இரவு (செப்ரெம்பெர் 05, 2016) இடம்பெற்ற தியான நிகழ்வில் தொடர்ந்தும் பிரசங்கம் நிகழ்த்துகையில்@
உலக அமைதிக்கு ஆதாரமாக மனதுதான் அமைந்துள்ளது. ஒவ்வொரு தனிமனித அமைதியும் உலக அமைதிக்கு வழி கோலும்.
ஆகவே, ஒவ்வொருவரின் மனதும் எப்பொழுது அமைதியடைகிறதோ அப்பொழுது உலக அமைதியும் கிட்டும். அதன் பின்னர் இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.
ஆன்மீக ஞானம் தான் உண்மையான உலக அமைதிக்கு வழி.
இந்த உலகம் இழந்த ஒரு பொக்கிஷம் அமைதி. ஆனால் அது மீளக் கொண்டுவர முடியாத ஒரு சிரமமான விடயமல்ல.
மனதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். மனம் என்பது கடலலைகள் போன்று சலனமுள்ளது.
பலவிதமான எண்ணங்களும் அலையலையாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருப்பதால் இந்த மனதிற்கு ஓய்வே கிடையாது.
ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் விலைமதிக்க முடியாத சுயநலமற்ற அன்பு, தன்னம்பிக்கை, தைரியம், சகிப்புத் தன்மை, நேர்மை, நல்லொழுக்கம், மென்மை போன்ற பல நல்ல பொக்கிஷங்கள் உள்ளன.
ஆன்மாவில் அடங்கியுள்ள சுய கட்டுப்பாடு, ஆளுகை, தூய்மை, மகிழ்ச்சி, அன்பு, சாந்தி ஞானம், பேரானந்தம் ஆகிய குணங்களை நாம் உபயோகம் செய்யாது விட்டதால் காமம், குரோதம், கோபம், பேராசை பற்று, அகங்காரம் என்பவை மேலெழுந்து ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறது.
இப்பொழுது உலகில் குற்றங்களும் பிரச்சினைகளும் அதிகமாயிருப்பதற்கு இவைதான் காரணம்.
பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம். என்பவை இதன் பக்க கிளைக் குணங்களாக உருவெடுக்கின்றன.
உலகம் முழுவதும் இந்தக் குணங்கள் வியாபித்துள்ளன.
மேல் கடலில் இரைச்சலும் ஆழ்கடலில் அமைதியும் இருக்கும். அதுபோலத்தான் மனதும்.
நல்ல குணங்களை மனதின் அடி ஆழத்தில் பிரயோசனப்படுத்த வேண்டும். குழந்தைகள் மீது அன்பு காட்ட வேண்டும்.
இளையோர் தவறான திசைக்கு செல்ல நமது நடத்தைகள் தவறான முன்னுதாரணமாக இருந்து விடக் கூடாது.
தூய்மையான அன்புடனும், மரியாதையுடனும் கூடிய சிறந்த வழிகாட்டல் இப்பொழுது இளைய சமுதாயத்தினருக்குத் தேவையாகவுள்ளது.
பெரியவர்களுக்கு அன்பும் சிறியோருக்கு மரியாதையும் தேவை. யாரால் இந்த மரியாதையை வழங்க முடியும்,? சுய மரியாதையில் யார் நிலைத்திருக்கின்றார்களோ அவர்களால்தான் இந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். யோகம் என்பதும் அதுதான். யோகத்தைப் பிரயோகம் செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக ஒரு விடத்தைச் செய்யும் போது அது சுபாவமாக மாறிவிடும்.
நல்ல சிந்தனை நடத்தைகளில்தான் குணாம்சங்கள் ஆரம்பிக்கின்றது. நல்ல சிந்தனை உள்ள மனது நல்ல நடத்தைக்கும், நல்ல நடத்தை நல்ல செயற்பாட்டுக்கும் நல்ல செயற்பாடு அமைதிக்கும் வழிவகுக்கின்றது.” என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, கல்குடா பிரதேச பிரம்மகுமாரிகளும் மற்றும் ஆர்வலர்களும் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சுதாகரி மணிவண்ணன் தெரிவித்தார்.
இந்தியா சென்னையைச் சேர்ந்த பிரம்ம குமாரி ஜான்சி ராணி சென்னைப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் தொடர்புத்துறை பொறியியலாளரும் ஒரு மூத்த யோகா கலை நிபுணருமாவார்.
0 Comments:
Post a Comment