11 Sept 2016

கல்லடி மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் படுகாயம் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறைக்கு அனுப்பி வைப்பு

SHARE
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதியகாத்தான்குடி -3, பைஷல் வீதியைச் சேர்ந்த முஹம்மது பாறூக் ஹயாஸ் அப்கர்  (வயது 19) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவராகும்.

இவர் காத்தான்குடியில் பாதணிகள் தயாரிப்புத் தொழிலகத்தில் தனது இரவு நேரக் கடமையை முடித்து விட்டு வெளியேறி மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில்; அதிவேகமாகச் செல்லும்போது இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கல்லடியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுர வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவில் மின்விளக்குக் கம்பங்களுக்கு முன்னாலும் பின்னாலும் நிறுவப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்புக் கம்பியில் மோதியுள்ளது.

இதனால் இவரது தலை பலமாக அடிபட்டு அவ்விடத்திலேயே இரத்தம் பீறிட்ட நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

வீதியால் பயணித்தவர்கள் இதுபற்றி காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விபத்தில் சிக்கிய இளைஞனை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

அவர், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் “சாரதிப் பயிலுநர் -லேர்னர்ஸ்” என்ற குறிப்புத் தகடு மாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இச்சம்பவம் குறித்து காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 



SHARE

Author: verified_user

0 Comments: