கல்வித்துறை உட்பட எந்தவொரு விடயத்திலும் அரசியல் பழிவாங்கல் செய்யாத ஒரேயொரு மாகாண சபை நிருவாகம் கிழக்கு மாகாண சபைதான் என்பது பெருமைக்குரியதும்
நாட்டுக்கே முன்னுதாரணமானதுமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் கோட்டக் கல்விப் பிரிவிலிருந்து கல்வியியற் கல்லூரிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய பயிலுநர்களை வரவேற்று வாழ்த்தி பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் சனிக்கிழமை இரவு (ஓகஸ்ட் 27, 2016) இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,
மத்திய அரசில் ஒரு நல்லாட்சி இடம்பெறுகின்றபோதும் அதனையும் விட சிறந்ததொரு நல்லாட்சி கிழக்கு மாகாண சபையிலேதான் நடைபெறுகிறது
எல்லாக் கட்சிகளும் எல்லா சமூகங்களும் இணைந்து மிகவும் வெளிப்படைத் தன்மையாக, ஒழிவு மறைவும் வேறுபாடுகள், புறக்கணிப்புக்கள் இன்றி, எல்லா இடங்களையும், இனங்களையும், மதங்களையும், சமமாக மதித்துப் பங்கீடு செய்கின்ற ஒரு நிலைப்பாட்டிலே கிழக்கு மாகாண சபை நிருவாகம் ஒன்றித்து செயற்பட்டு வருகின்றது.
இது ஒன்றும் இலேசுப்பட்ட காரியமல்ல, பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தோம், தொடர்ந்தும் அத்தகைய சவால்களை உள்ளும் புறமும் எதிர்கொண்டு வருகின்றோம்.
இருந்தாலும், நாங்கள் மனம் சளைக்கவில்லை, உறுதியுடனிருந்து தியாகம் செய்து இன ஒற்றுமையைப் பலப்படுத்தி வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மனித வளம் முதலில் இந்த மாகாணத்திற்கே பயன்பட வேண்டும் என்ற முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும், தங்களது சொந்த மாவட்டத்தில், சொந்த ஊரில் அதிலும் வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் இடமாற்றம் கோரி நாளாந்தம் முதலமைச்சர் அலுவலகத்தை நாடி வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அதிலும் தமது கைக்குழந்தைகளுடன் வந்து இடமாற்றம் கேட்டு நிற்கும் ஆசிரியைகளே அதிகம். பல வருடங்களாக வெளியூர்களில் நீண்ட தூரம் பயணம் செய்து கடமையாற்றிக் களைப்படைந்த அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வீட்டுக்கருகில் இடமாற்றம் கோருவது நியாயம்தான்.
இந்த விடயத்தில் எவ்வாறான கொள்கைத் தீர்மானங்களை எடுத்து ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டு சீர்படுத்தலாம் என்பது பற்றி கிழக்கு மாகாணசபை பரிசீலிக்கின்றது. அடுத்த வாரம் இது இடம்பெறும். அந்த ஒழுங்குபடுத்தல் முடிந்தவுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.
0 Comments:
Post a Comment