9 Aug 2016

சிறுபான்மை இனமான மக்கள் சிறுபான்மை கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் துரை.

SHARE
இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும்.
என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தும்பங்கேணி குளத்தில் திங்கட் கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட நன்னீர் மீன் வளப்பு அறுவடை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்… 

எமது அமைச்சு எதிர்காலத்தில் நன்னீர் மீன் வளப்பிற்கு பல தரப்பட்ட உதவிகளை வழங்கும் இதனால் நன்நீர் மீன் பிடியாளர்கள் உற்பத்திகளை பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். இத்தொழிலை மேற்கொள்ளும் போது மீன் பிடியாளர்களுக்கு கால இடைவெளிகள் ஏற்படலாம் அதனை மீனவர்கள்; நிவர்த்தி செய்து கொள்வதற்கு வேறு தொழில்களை நாடவேண்டும் மட்டக்களப்பினை பொறுத்தவரையில் எமது தொழிலாளர்கள் ஒரு தொழிலில் மாத்திரம் இருக்காமல் வேறு தொழில்களையும் மேற்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

எமது பிரதேசத்தில் கூடுதலாக மீன்பிடி, விவசாயம், விலங்கு வளர்ப்பு, வேளாண்மை, பால் உற்பத்தி போன்ற தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொள்வதனை அவதானிக்கக் கூடியாதாக இருக்கின்றது. எத்தொழிலை மேற்கொண்டாலும் அதனை திருப்திகரமாக மேற்கொள்ள வேண்டும். மக்கள்; உழைக்கின்ற உழைப்பினை சுரண்டுவதற்காக முதலாளிவர்க்கம் செயற்படுகின்ற தன்மையினையும் தற்காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாங்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே பிறரின் சுரண்டலுக்கு உழைப்பாளிகள் இடமளிக்கக் கூடாது.

மக்களுக்குத் தேவைப்படுகின்ற கடன்களை அரசாங்க வங்கிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள் இக்கடன்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்கு முதலாளிகளிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை இதனாலையே மக்களின் உழைப்பினை முதலாளி வர்க்கத்தினர் சுரண்டுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

நாங்கள் இந்த நாட்டுக்குள் வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை இனமாக காணப்படுகின்றோம் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் எழுபத்தைந்து வீதமான பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழ்கின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கிலே செறிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே எமது இனம், மொழி, நிலம், போன்றவற்றினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது இதற்காக தொடர்ச்சியாக எமது பலத்தினை நிருப்பித்து காட்ட வேண்டும். பெரும்பான்மையினக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் இவற்றினை ஒருபோதும் நிருபிக்க முடியாது என்பதை எமது மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கதிரகாமம், சிலாபம், நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் அங்கு உள்ளன இப்பிரதேசத்தில் எமது தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் ஆனால் தற்போது ஆலயங்கள் மாத்திரமே உள்ளன.

இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை இனமான தமழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்து வெற்றிபெற்று, இணைந்து குரல் கொடுப்பதன் ஊடாகவே எமது சிறுபான்மை இனத்தின் உரிமைகளை பெற்றெடுக்க முடியும் இதற்காக பிராந்திய அரசியல். பிராந்திய கட்சி, பிராந்திய மொழி போன்றவற்றில் பற்றுள்ளவர்களாகவும், அதனை ஆதரிப்பவர்களாகவும் எமது சிறுபான்மை இனம் இந்த நாட்டில் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: