வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் அதற்கு வெளியேயுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்;ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிழவுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
இதற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க விசேட திட்டமொன்றை அரசு அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கூறியதாவது…
ஒரு தொகுதியில் குறைந்தது இரண்டு பாடசாலையாவது தேசிய பாடசாலையாக மாற்றுவதன் மூலம் அப்பிரதேசத்தின் கல்வியை வளர்ச்சியடையச்செய்ய முடியும். தேசிய பாடசாலைகள் இந்நாட்டின் கல்வித்தேவையில் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றன. அதேபோன்று, மாகாண பாடசாலைகளும் பெரிதும் பங்களிப்பு செய்கின்றன. ஆனால், வளப்பற்றாக்குறை காரணமாக தேசிய பாடசாலைகளைப் போன்று சிறப்பான கல்வியை மாகாண பாடசாலைகளினால் வழங்க முடியாதுள்ளது.
குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணம் அதற்கு வெளியேயுள்ள பகுதிகளில் இருக்கின்ற தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் பெரும் வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது. விசேடமாக கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இல்லாத பற்றாக்குறை இப்பகுதிகளில் உள்ளன. முக்கிய பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலை வடக்கு –கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் பெரும் பிரச்சினையாக உள்ளது.
கணிதம், விஞ்ஞான ஆசிரியர்கள் இல்லாமையினால் உயர்தரபிரிவில் விஞ்ஞான, கணித வகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கலை, வர்த்தக பிரிவுகளில் மாத்திரமே மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தி பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பாடசாலைகளில் விஞ்ஞான , கணித பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு விசேட திட்டமொன்றை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.என்றார்.
0 Comments:
Post a Comment