இவ்வாண்டில் மட்டக்களப்பு மாட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள 44 இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைத் தெரிவு செய்வதற்கான பரசீலனை திங்கள் மற்றும் செவ்வாய் (ஓகஸ்ட் 08,09 -2016) ஆகிய இருதினங்களும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட
காரியாலத்தில் காலை 8 மணிதொடக்கம் இடம்பெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.
இதுபற்றி தொடர்ந்து தெரிவித்த நைறூஸ், நடப்பாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள பொருத்தமான சிறந்த இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு இளைஞர் கழகங்கள் கோரப்பட்டிருந்தன.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் 88 திட்டங்கள் இளைஞர் கழகங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள மொத்த அபிவிருத்தித் திட்டங்களையும் பரிசீலனை செய்து அவற்றிலிருந்து பிரதேசத்திற்குப் பொருத்தமான சமகாலத் தேவையுள்ள 44 அபிவிருத்தித் திட்டங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.
தெரிவு செய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதற்கட்ட அபிவிருத்தி நிதிக் கொடுப்பனவு ஐம்பதுனாயிரம் ரூபாய் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 12, 2016) மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வைத்து இளைஞர் கழகங்களிடம் கையளிக்கப்படும்.
அபிவிருத்தித் திட்டங்களை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் பரிசீலனைக் குழுவில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர், தொழினுட்ப உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோரடங்கிய குழுவினர் கடமையாற்றுவர்.
இதேவேளை குறிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டங்களை துஷ்பிரயோகமின்றி வெற்றிகரமாக, சிறந்த வேலைத் திட்டமாக நடைமுறைப்படுத்தும் இளைஞர் கழகங்களில் ஒன்று தேசிய ரீதியில் தெரிவு செய்யப்படுமிடத்து அந்தக் கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு மாவட்டக் காரியாலயம் 0652224376 அல்லது மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் 0777874472 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
0 Comments:
Post a Comment