14 Aug 2016

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக “காத்தான்குடி சமூக குழுமம் வட்ஸ் அப் குழு” 15 அம்ச ஆலோசனைகள் முன்வைப்பு

SHARE
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு “காத்தான்குடி சமூக குழுமம் - வட்ஸ் அப் குழு”
15 அம்ச ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.

மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வு சனிக்கிழமை (ஓகஸ்ட் 13, 2016) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானபோது காத்தான்குடி சமூக வட்சப் குழுமம் கலந்து கொண்டு பின்வரும் 15 அம்சக் கருத்துக்களை நல்லிணக்கப் பொறிமுறையில் உள்வாங்குமாறு செயலணியிடம் கையளித்தது.

01. தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்புக்களில் முஸ்லிம்கள் ஒரு தரப்பாகக் கொள்ளப்பட வேண்டும்;.

02. முஸ்லிம்கள் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்பது உள்வாங்கப்படல் வேண்டும்

03. 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்குற்படுத்தப்படல் வேண்டும்.

04. 1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பாகவிருந்த புலிகளின் அப்போதைய தளபதிகளான கருணா, பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்குற்படுத்தப்படல் வேண்டும்.

05. ஏறாவூர், அழிஞ்சுப்பொத்தானை பள்ளிவாயல் படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

06. 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் வாழ்வோர் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்.

07. யுத்தத்தினால் தொழில் ரீதியான இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும்.

08. காணமற்போனோர் தொடர்பாக நிறுவப்படும் அலுவலகமானது மாவட்ட மட்டத்தில் நிறுவப்படல் வேண்டும்.

09. யுத்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான உரிய இழப்பீடுகளை வழங்கும் வகையில் இழப்பீட்டுக்கான செயலகம் மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படல் வேண்டும்.

10. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஒருவர் அது தொடர்பில் தான் எவ்வகையான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றார் என்பதனை விசேட நீதிமன்றம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான விசேட பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்.

11. யுத்தகாலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் அல்லது இதுவரை உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படாத படுகொலைகள், கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் உண்மையினை கண்டு பிடிப்பதற்கான செயல்முறை உருவாக்கப்படல் வேண்டும்.

12. உண்மை கண்டறிப்படும் இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோரல், பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பளித்தல் போன்ற செயல்முறைக்கான முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

13. யுத்தத்தினால் குறிப்பாக தமிழ்;, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உருவாகிய மனக்கசப்புக்கள் முரண்பாடுகள், இனவாத உணர்வுகள், மதவாத உணர்வுகள் என்பவற்றை களைந்து நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என்பனவற்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் மாவட்ட செயலகம் பிரதேச செயலக மட்டத்தில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்
14. கடந்த கால நிகழ்வுகள் நிகழாதிருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்பள்ளிகள், பாடசாலை, பல்கலைக்கழகம், சமூக நிறுவனங்களுக்கு ஊடாக விழிர்ப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

15. இலங்கையில் இன ரீதியாக வேலைத்திட்டங்கள், அபிவிருத்தி, அரசியல்சார் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தவிர்த்து சமூகநீதி, மனிதநலன் என்ற அடிப்படையில் ஒழுங்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

காத்தான்குடி சமூக குழுமம் சார்பாக எம்.ஐ.எம். பஸ்ஹான், ஏ.எம். பர்சாத், எம்.பி.எம். ரம்ஸ{தீன், எம்.ஐ.எம். ரகீப், எம்.எஸ்.எம். ஹில்மி, எம்.எம். ஹானி ஆகியோர் இந்த ஆலோசனைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: