25 Jul 2016

கிழக்கு மாகாணத்தில் ஸ்தாபன விதிகளுக்கு அமைவாக அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படுவதில்லை-கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் அதிருப்தி

SHARE
கிழக்கு மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றபோது ஸ்தாபன விதிகளுக்கு அமைவாக நேர்முகத் தேர்வு இடம்பெறுவதில்லை என அதிருப்தி தெரிவித்து ஆளுநர், மாகாணக் கல்வி அமைச்சர், செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.

மேற்படி விடயம் சம்பந்தமாக திங்களன்று (ஜுலை 25, 2016) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மாகாணக் கல்வி அமைச்சிற்குட்பட்ட பல்வேறு தரங்களில் உள்ள பாடசாலைகளில், அதிபர் வெற்றிடம் ஏற்படுகின்றபோது ஸ்தாபன விதிகளுக்கு அமைவாக விண்ணப்பம் கோரப்படுவதுமில்லை, நேர்முகத் தேர்வு இடம்பெறுவதுமில்லை.
பாடசாலையின் தரத்திற்கேற்ப மாகாணத்தில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களுக்கு, ஒரேமாதிரியான விண்ணப்பப் படிவங்கள் பயன்படுத்தப்படல் வேண்டும்.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் அதிபர் வெற்றிடம் உள்ள ஒவ்வொரு பாடசாலைக்கும் வெவ்வேறு விதமான விண்ணப்பப் படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்குக் காரணம் அமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலும், வலயத்தின் அதிகாரிகள் மட்டத்திலும் குறித்த பாடசாலைக்கு யாரைத் தெரிவு செய்யவேண்டுமென்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப விண்ணப்பப் படிவங்களை தயாரித்து அனுப்புகின்றனர்.

இச்செயற்பாடானது பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டத்தைப் பின்னடையச் செய்யவே உதவுகிறது.

மேலும் அதிபர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்ற பின்னர் அவர் பெற்ற புள்ளிகள் பரீட்சாத்திக்கு அனுப்பப்பட வேண்டும். அல்லது பொதுவான விளம்பரப் பலகையிலாவது இடப்படல் வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறை கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் பின்பற்றப்படுவதில்லை.

நேர்முகத் தேர்வு நிறைவடைந்து பல நாட்கள் அல்லது பல மாதங்கள் கழிந்த நிலையில் பரீட்சார்த்திகளிடமிருந்து மேலும் பல ஆவணங்களைக் கோரிப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை காணப்படுகிறது.

இச்செயற்பாட்டின் மூலம் நேர்முகத் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதுடன் பரீட்சாத்திகளை அவமானப்படுத்தும் செயற்பாடாகவும் நாம் பார்க்கின்றோம்.

மேலும் கடந்த காலங்களில் இதுபோன்று பல முறைகேடுகள் இடம்பெற்று அது விடயமாக  மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு ஆணைக்குழுவின் விசாரணையின் பின்னர் முடிவுகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் திருகோணமலை வலயத்தில் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் நேர்முகப் பரீட்சை மூலம் நியமிக்கப்பட்ட அதிபர், மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்வின் பிரகாரம் ஒருவருடத்திற்குப் பின்னர் நீக்கப்பட்டு வேறு அதிபர் நியமிக்கப்பட்டார்.

சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயம் மற்றும் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி ஆகிவற்றின் நேர்முகத் தேர்வு முடிவுகள் பிழையானதென மனித உரிமை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் விண்ணப்பம் கோரப்படல் வேண்டுமென கௌரவ ஆளுநரினால் அறிவிக்கப்பட்டது.

இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுகளை வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நீதி நியாயத்துடனும் நடத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டோருக்கு உள்ளது.
ஆகவே, பொருத்தமான அதிகாரிகளை நியமித்து நேர்முகத்தேர்வை நடாத்தி கல்வித் திணைக்களத்தை ஊழலற்றதாக மாற்றியமைக்க வேண்டும்.

போர் இடம்பெற்ற காலத்தில் கூட கல்வி அடைவு மட்டத்தில் முன்னணியில் இருந்த எமது மாகாணம் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளமைக்கு வினைத்திறனற்ற அதிபர்களும் தூரநோக்கற்ற வலயக்கல்விப் பணிப்பாளர்களுமே காரணம்.

எனவே, எங்;களின் நியாயமான கோரிக்கையை உதாசீனப்படுத்தாமல் கவனத்திற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஊழல் நிறைந்த வெளிப்படைத் தன்மையற்ற வழிமுறைகள் இனிமேலும் தொடருமாக இருந்தால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமோ, அல்லது மனிதவுரிமை ஆணைக்குழுவிடமோ முறைப்பாடு செய்யவேண்டி நேரிடும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: