யுத்தத்திற்குப் பின்னர் சிவில் சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் காட்சிக் கலையரங்க அமர்வொன்றை (Forum Theatre) செவ்வாய்க்கிழமை (ஜுலை 26, 2016) மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையம்(Eastern
Social Development Foundation) தன்னார்வ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல். புஹாரி முஹம்மத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் கூறிய அவர், இள வயதுத் திருமணம், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள், காணி, மொழிப் பிரச்சினைகள், குறிப்பாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதற்காகவே இந்த காட்சிக் கலையரங்க அமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸ் உள்ளிட்ட அரச சேவையாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் இந்த விடயத்தில் அக்கறைக்குரிய தரப்பினராகவும் பங்குபற்றுநர்களாகவும் அழைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் நண்பகல் வரை ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
போகஸ் வுமென் (Focus Women) அனுசரணையில் இடம்பெறும் இந்நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ். ஸ்ரீரஞ்சனி பிரதான வளவாளராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தேசிய மட்டத்தில் தெளிவு படுத்தப்படவேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுமே திட்டத்தின் இலக்காக இருப்பதாக புஹாரி மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment