தமிழ் மக்களின் ஈழக்கனவினை சர்வதேசத்தின் துணையுடன் நாங்கள் தகர்த்தெறிவோம் என்று நல்லாட்சியின் ஜனாதிபதி சொல்வது வெறும் பகல் கனவுதான் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) முனைக்காட்டில் வியாழக் கிழமை (16) இரவு தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) வின் நிதியொதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் அரங்கம் வைபவ ரீதியாக வியாழக் கிழமை (16) இரவு 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...
முனைக்காட்டு மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு கொடுத்த ஊக்கம், ஆதரவு இன்றும் என் மனதில் அழியாமல் இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இந்தக்கிராம மக்கள் கடந்த காலப் போராட்ட வரலாற்றில் எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்திருக்கிறார்கள். எமது பிரதேசம் மாத்திரமல்ல வடக்கு கிழக்கு இழக்கக் கூடாத எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது.
பொருளாதாரம், கல்வி, கலை, கலாச்சாரங்களுக்கு மேலாக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான் உயிர்களை இழந்திருக்கிறோம். அந்த வகையில் முனைக்காட்டுக் கிராமம் வடகிழக்கிலே ஒரு கிராமத்தில் கூடுதலான இளைஞர் யுவதிகளை போராட்டத்துக்கதக மாவீரர்களாக்கிய கிராமங்களில் முன்னணியில் திகழ்ந்திருக்கிறது என்பதை யாருமே மறந்திட முடியாது.
குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்கு முன்பு நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் தெகிவளையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சி.வி.குணவர்த்தனாவின் 16 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றியிருக்கிறார்.
இந்த நாட்டில் நல்லாட்சியின் ஜனாதிபதியாக கடந்த கால கொடூர ஆட்சியின், எமது மக்களின் உடமைகளை அழித்த, மக்களின் உயிர்களை கொத்துக் கொத்தாகப் பறித்த அந்த ராஜபக்சவின் ஆட்சியை மாற்றி ஒரு புதிய ஆட்சியை, புதிய ஜனாதிபதியை நல்லாட்சி என்கிற இந்த ஆட்சியை நாங்கள் சிறுபான்மை இனம், குறிப்பாக வட கிழக்கு மக்கள் கொண்டு வந்திருந்தோம்.
இந்த நல்லாட்சியில், புதிய ஜனாதிபதியில் ஒரு நம்பிக்கை வைத்திருந்தோம். எமது புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சனைக்கு விடுதலைப் போராட்டத்திற்கு விடிவு வரும் ஒரு நிரந்தரமான, எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு வரும் ஒரு நப்பாசையில் நாங்கள் இந்தப் புதிய ஜனாதிபதியையும், புதிய ஆட்சியையும் தேர்ந்தெடுத்தோம். ஆனால் இந்தப் புதிய ஜனாதிபதியின் மேலும் இந்த நல்லாட்சியின் மேலும் தமிழ் மக்களுக்கு வர வர நம்பிக்கையீனம் வந்து கொண்டிருக்கிறது.
சி.வி.குணவர்த்தனாவின் 16 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் இந்த நாட்டின் ஜனாதிபதி, சர்வதேசத்தின் துணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கனவான ஈழக் கனவினை நாங்கள் தகர்த்தெறிவோம் என்று உரையாற்றியிருக்கிறார்.
எங்களுக்குத் தெரியும், உலக நாடுகளுக்கே தெரியும், இந்த நாட்டின் ஜனாதிபதியான உங்களுக்குத் தெரியும், எமது ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்கு, மௌனிக்க வைப்பதற்குத் தோர்க்கடிப்பதற்கு உங்களுக்கு இந்த சர்வதேசத்தில் 16க்கு மேற்பட்ட நாடுகள் உதவி செய்தன. ஆயுத ரீதியாகவும் உதவிகள் வழங்கியதன் மூலமாகவும் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன.
ஆனால் அந்த நாடுகள் அனைத்தும் இந்த நாட்டின் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வது நீண்ட காலப் போராட்டமான தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்பதுதான். கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கையினால் நிறைவேற்றப்பட்டது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கடந்த கால போராக்காலச் சூநிலையில் நடந்தவற்றை விசாரிக்க வேண்டும், அதில் போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று இலங்கை அரசினால் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. அந்த முன்மொழிவுக்கான வாய்மூலமான ஒரு அறிக்கை தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவின் மகாநாட்டில் முன்வைக்க வேண்டிய இந்த நேரத்தில் நீற்கள் கூறுகின்றீர்கள் சர்வதேசத்தின் துணையுடன் ஈழக்கனவை முறியடிப்போம் என்று.
ஈழக் கனவு என்பது இந்த நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து ஓரிரண்டு வருடங்களிலே இந்த நாட்டின் இன்க் கலவரம் தொடங்கியது. சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது அதைத் தொடர்ந்து தமிழ் இனம் இரணடாம் தரப்பிரஜைகளாக ஆக்கப்பட்டதுமே எமது இனத்திற்கு தனி நாட்டு எண்ணம், ஈழக்கனவு தோன்றிவிட்டது.
அது வெறுமனே தமிழீழ விடுதலைப்புலிகளின் கனவு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கனவுதான் ஈழக்கனவு. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தியாக்கப்படும் வரை அந்தக் கனவினை உங்களால் தோர்க்கடிக்க முடியாது. சர்வதேசம் கேட்பது இந்தப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட எங்களது அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஆயுதப்படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட, அதிகாரப் பரவலாக்கல் கொண்ட வடக்குக்கிழக்கு இணைந்த ஒரு தாயகம் உருவாக்கப்பட வேண்டும். அதற்குள்ளே காணி, பொலிஸ் அதிகாரம் உட்கட சகல அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்ட சுயாட்சி கொடுக்கப்பட வேண்டும் என உங்களை சர்வதேசம் வர்ப்புறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சர்வதேசத்தின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கனவான ஈழக் கனவினை நாங்கள் தகர்த்தெறிவோம் என்று சொல்வது வெறும் பகல் கனவுதான்.
எங்களது போராட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வினை தாருங்கள். தந்தீர்களானால் தமிழ் மக்களின் அந்தக் கனவு ஈழக்கனவு என்பதை நிறுத்திவிடலாம் என்பது எங்களது கோரிக்கை என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment