8 Jun 2016

நிலக்கடலை அறுவடை நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்!

SHARE
மட்டக்களப்பு மாவடியோடை புத்தம்புரியில் நேற்று செவ்வாய்கிழமை பகல் (07) நடைபெற்ற கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஆற்றுப் படுக்கையை அண்டிய பகுதிகளில் நிலக்கடலை செய்கை ஊக்குவிப்புத்
திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நிலக்கடலை  அறுவடை விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், வட கிழக்கில் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் எங்களது அயல் நாடான இந்தியாவை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாடு ஒரு தீவாக இருந்தாலும்  இந்த நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனக்கென பிரத்தியேகமான இயல்புகளைக் கொண்டு காணப்படுகிறது. இங்கு வாழுகின்ற நாங்கள் தமிழினை தாய் மொழியாகவும் இருவகையான மதங்களைப் பின்பற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். பெரும்பான்மை இன சகோதரர்களும் எங்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குரிய தனித்துவத்தைக் காட்ட வேண்டியது தமிழர்களாகிய எங்களது கடமை.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்பு எங்களது மண் குடியேற்றங்கள் மூலம் கபளிகரம் செய்யப்பட்டது. தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் எங்களுடைய மொழியினுடைய பாவனை மட்டுப்பட்டது. எங்களுடைய இளைஞர்களுடைய படிப்பை தரப்படுத்தல் என்கின்ற நடைமுறை குழப்பியது இதன் காரணமாக நாங்கள் பல்வேறு இடர்பாடுகளை அனுபவித்தோம். இன்று நல்லாட்சி என்கின்ற மகுடத்தை உருவாக்கி அந்த ஆட்சியில் அரசை இயக்குகின்றவர்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களும் இருக்கின்றோம். சமாதான காலம் என்கின்ற காலங்களிலே எங்களது வளங்கள் சுரண்டப்படுவது போன்று உரிமை, சுதந்திரம் மற்றும் இருப்பு சுரண்டப்படும் நிலமை இருக்கிறது. வட கிழக்கில் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் எங்களது அயல் நாடான இந்தியாவை இதற்குப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் நாடு எவ்வாறு தங்களது அரசியலை நடாத்திக்கொண்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் அல்லது பிஜேபி தமிழ் நாட்டில் பெரிய அளவில் தங்களது வியூகத்தை வகுக்க முடியாமல இருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டுகொண்டிருப்பதன் காரணமாக தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது, தமிழ் அங்கு ஆட்சி மொழியாக இருக்கிறது, தமிழ் மக்கள் முழு இந்தியாவிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இலங்கையில் தமிழ் மொழி வாழ வேண்டுமென்றால் தமிழ் பிரதேசங்கள் வாழ வேண்டும் என்றால் நாங்கள் திராவிட முன்னேற்ற கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போன்ற ஒரு அரசியல் கட்சியொன்று இருக்க வேண்டும் என்ற நடைமுறையை எம்மனதிலே பதித்துக்கொள்ள வேண்டும்.

54 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் தமிழர்களுக்கான நிலையை உறுதியாக வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அதேபோன்று 9 மாகாணங்களைக் கொண்ட இந்த நாட்டிலே இரண்டு மாகாணத்தில் இருக்கின்ற நாம் எங்களது தனித்துவ அடையாளமான தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடையாளத்துக்குள் நின்று இந்த நாட்டின் தேசிய வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் உரிமைக்கு குரல்கொடுப்போம் உறவுக்கு கைகொடுப்பபோம் என்ற தாரக மந்திரத்தை மனதில் பதித்து செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழர்களுடைய அரசியல் பிராந்திய கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலே தான் இருக்கிறது தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி போன்றன கட்சிகள் தமிழருக்கான உரிமைகள் என்று வருகின்றபோது எவரும் கைகொடுக்கமாட்டார்கள். அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தவிர எந்தவொரு கட்சியும் எங்களுடைய நிலத்தை, மொழி, பண்பாட்டினை, மதம், கலாசாரத்தை காப்பாற்றக் கூடிய கட்சி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சேர் பொன்.இராமநாதன், சேர் பொன்.அருணாசலம்  போன்ற மிகப்பெரிய எமது தலைவர்கள் தேசிய கட்சிகளுடன் சேர்ந்திருந்து பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய துன்பியலைத் தடுத்தார்கள். முஸ்லிம் மக்களுடைய அதிர்ப்தியைப் பெற்றுக்கொண்டாலும் கூட இந்த நாடு என்ற ரீதியில் முஸ்லிம் மக்களைத் தாக்கினார்கள் என்பதற்காக சிறைகளில் அடைக்கப்பட்ட சிங்களவர்களை காப்பற்றினார்கள்.

இராமநாதன் மற்றும் அருணாசலம்  தமிழர்களுடைய உரிமைகளைப் பற்றி கேட்டபோது அவர்களை தள்ளிவிட்டார்கள். அதன் காரணமாக இலங்கையில் தமிழர்களுக்கு என ஒரு அரசியல் நடைமுறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழர் மகாசபையை சேர் பொன் அருணாசலம் உருவாக்கினார் என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: