கிழக்கு
மாகாணத்தில் இயங்கும் மதுபானசாலைகளை முற்பகல் 11.00மணிக்கு பின்னர் திறக்கப்படவேண்டும்
என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையிலுள்ள மாகாண
சபையில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் இயங்கும்
மதுபானசாலைகள் முற்பகல் 11.00மணிக்கு பின்னர் திறக்கப்படவேண்டும் என்ற பிரேரணை மாகாணசபையில்
கொண்வரப்பட்டது. இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய மேற்படி மாகாணசபை
உறுப்பினர்,
கிழக்கு மாகாணத்தில் இயங்கும் மதுபானசாலைகள்
முற்பகல் 11.00மணிக்கு பின்னர் திறக்கப்படவேண்டும். கிழக்கு மாகாணத்தில் அதிகளாவான
மக்கள் விவசாயத்தினையும் மீன்பிடியையுமே நம்பிவாழ்கின்றனர்.
காலையில் தொழிலுக்கு செல்லும்போதும் மாலை
வரும்போதும் மதுபான சாலைக்கு சென்றே செல்கின்றனர். சிலவேளைகளில் மதுபானசாலைக்கு செல்வோர்
தொழிலுக்கு செல்லாத நிலையும் இருந்துவருகின்றது. இதன் காரணமாக பல குடும்பங்கள் வறுமையில்
வாடும் நிலையும் ஏற்படுகின்றது.
எனவே ஓரளவேனும் மக்களின் வறுமையினை குறைக்கும்
வகையில் இந்த மதுபானசாலை திறக்கும் நேரத்தினை மாற்றவேண்டும் என்று கொண்டு வரப்பட்டுள்ள
பிரேரணையை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அரசாங்கத்தின் நியதியின் படி கிழக்கு
மாகாணத்தில் 82 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கமுடியும் என்ற நியதியுள்ளது. ஆனால் மட்டக்களப்பு
மாவட்டத்தில் மட்டும் 60 க்கு மேற்பட்ட மதுபானசாலைகளும் மதுபானத்துடன் தொடர்புடைய ஹோட்டல்களும்
உள்ளன.
1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஐந்து மதுபானசாலைகளே இயங்கியது. அக்காலத்தில் படுவான்கரை பகுதியில் எந்தவொரு
மதுபானசாலைகளும் இயங்கவில்லை. அப்பிரதேச மக்களே எந்தக்காலத்திலும் துன்பத்தினை எதிர்கொண்டு
வருபவர்கள்.
போர்காலத்திலும் சரி இயற்கை அனர்த்த காலங்களிலும்
சரி விவசாயத்தினையே நம்பியுள்ள அப்பகுதி மக்கள் மிக மோசமான பாதிப்பினை எதிர் கொண்டவர்களாக
உள்ளனர்.இன்று அப்பகுதிகளில் ஐந்துக்கு மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளது.
மிகவும் குறைந்த வருமானத்தினைக் கொண்டுள்ள
இப்பகுதி மக்களில் சிலர் மதுபான விற்பனை நிலையத்தினை நாடிச்செல்வதன் காரணமாக அவர்களின்
குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
கிழக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்
பட்டிருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தினை கவனத்தில் கொண்டு மதுபானசாலைகளை குறைந்தது
11.00மணிக்காவது திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனூடாக எமது பிரதேசத்தின்
வறுமையை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யலாம் என கேட்டு இப் பிரேரணையை முன் மொழிகிறேன். என்றார்

0 Comments:
Post a Comment