27 May 2016

வந்தாறுமூலையில் உழவர் சிலை திறந்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட உழவர் சிலையொன்று நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், தொழுதுண்டு மற்றையவர் பின் செல்வார்' என்பதற்கமைய உழவர்களின் சிறப்பை வெளிக்காட்டும் முகமாக வந்தாறுமூலை மேற்கு கிராமத்து அபிவிருத்திச் சங்கம், வந்தாறுமூலை இளைஞர்களின் பங்களிப்பு, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இ.சைலகோபன் போன்றோரின் நிதி உதவியுடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் குறித்த இடத்தில் உழவர் சிலை அமைப்பதற்கு பல்வேறுபட்ட இடர்பாடுகள் மற்றும் சட்டச்சிக்கல்கள் காணப்பட்ட போதும் அரச நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகளின் பின்பு குறித்த இடத்தில் சிலையை நிறுவுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தின் வந்தாறுமூலை மற்றும் அண்டிய பிரதேசங்களில் நாகர்களின் ஆட்சி தடயங்கள் மற்றும் ஆட்சி மையங்கள் காண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகளும் நடைபெற்று வருகின்ற நிலையில், குறித்த சிலைக்கருகில் தமிழர்களின் பண்டைய வரலாறு மற்றும் நாகர் காலத்து வரலாற்றைக் கூறும் கல்வெட்டுக்களையும் பதித்து அமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

சிலை திறப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம், வைத்திய அதிகாரி, செங்கலடி பிரதேச சபை செயலாளர், வந்தாறுமூலை கிராம சேவகர், பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், வந்தாறுமூலை வாழ் மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: