கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் ஆகியோருக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்குகள் மட்டக்களப்பு மேல்
நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன. சந்தேக நபர்களான இவர்கள் இருவரும் பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது, சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஜு{ன் மாதம் 30ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திராணி ஒத்திவைத்தார். இதேவேளை, சந்தேக நபரான பூ.பிரசாந்தனுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திராணி ஒத்திவைத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரனும் மற்றும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment