18 May 2016

ஏறாவூர் மருந்துக் கடையில் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

SHARE
ஏறாவூர் நகர கடைத்தெருவில் உள்ள மருந்துக் கடையொன்றில் வைத்தியரின் அங்கீகாரமின்றி விற்பனை செய்யப்பட்ட ஒரு வகைப் போதை மாத்திரையை செவ்வாய்க்கிழமை 17.05.2016 மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ஏறாவூர் நகர பிரதான வீதியிலுள்ள குறித்த மருந்துக் கடையில் இந்த வகைப் போதையூட்டும் மாத்திரை விற்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவினரும் மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவின் பிரதான பரிசோதகர் ரீ. வரதராஜன் தலைமையிலான குழுவினரும் இணைந்து இந்த திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது தலா ஒவ்வொன்றும் 150 மில்லிகிராம் கொண்ட 18 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் அந்த மருந்துக் கடையில் அந்த மாத்திரைகளை விற்பனை செய்த நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாத்திரை இளவயதினருக்கு குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்குப் போதையூட்டுவதற்காக சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக அறியப்படுகின்றது.

இந்த மாத்திரை போதை தரக்கூடியது என்றும் மேலும் நீண்ட காலப்போக்கில் நரம்பு மண்டலங்களைத் தாக்கி நிரந்தரமாக ஊனமுறச் செய்யக் கூடியது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக தாம் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவினர் தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: