ஸ்ரீலங்காவிலுள்ள சில மதத் தலைவர்களே இனவாதத்தைக் கிளப்பி நாட்டைச் சீரழிவுக்கு கொண்டு சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட புலவர் ஒளவையாரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கிற்கு அப்பாலுள்ள தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,
தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், 30 வருட யுத்தத்திற்கு முன்பு மட்டுமல்ல, 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்படுவதை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சோழர்கள் இந்த நாட்டை ஆண்டார்கள் என்பதன் வரலாற்று சான்று பொலன்னறுவை என்றும் அங்கிருந்த சோழர்களின் கட்டடங்கள், சிவாலயங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் காணாமல் செய்யப்பட்டும் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் எனக் குறிப்பிட்ட அவர், வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயக தேசம் எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவை மாறிமாறி ஆட்சி செய்த அரசியல் தலைவர்களும் இந்த நாட்டில் உள்ள சில மதத் தலைவர்களுமே இனவாதத்தை கிளப்பி இந்த நாட்டை சீரழிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இனவாதத்தை தூண்டி மதவாதத்தை தூண்டி அரசியல் நடத்தும் போக்கு இந்த நாட்டில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment